தாய்ப்பால் குடித்தபோது குழந்தை மூச்சு திணறி சாவு
லண்டன்: தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது தாய் அயர்ந்து தூங்கிவிட்டதால், எதிர்பாராத விதமாக குழந்தை மூச்சுத் திணறி இறந்தது.
வாஷிங்டன் நகரில் இருந்து குவைத்துக்கு விமானத்தில் சென்ற, நான்கு வார பெண் குழந்தைக்கு இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் தாய் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 29.
யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் குழந்தையுடன் பயணித்த அவர், குழந்தைக்கு பாலூட்டினார். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டார்.
விமானம் அட்லான்டிக் கடலின் மேலே 33 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, திடீரென அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பினர்.
மார்பில் தலை தொங்கியபடி தன் குழந்தை கிடப்பதை பார்த்து ஒன்றும் புரியாமல் அப்பெண் அழுது கொண்டிருந்தார். குழந்தையை காப்பாற்ற விமானத்தில் இருந்த மருத்துவர் ஏதேதோ முயற்சிகள் செய்தார். எதுவும் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இறக்கப்பட்டது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தாய்ப்பால் குடித்த குழந்தை இறந்தது பயணிகளிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'அந்த தாயைப் பார்த்தால் சந்தேகம் ஏதும் எழவி்ல்லை. குழந்தையுடன் தனியாகத் தான் அவர் பயணம் செய்துள்ளார்.
குவைத்தில் தனது உறவினர்களிடம் காட்டுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சங்கத்தினர் கூறுகையில், 'இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு. பொதுவாக படுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்கக் கூடாது என தாய்மார்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறுகிறோம். ஆனால், பெரும்பாலானோர் அதை கண்டு கொள்வதில்லை.
குறிப்பாக செவிலித் தாய்களுக்கு இந்த அறிவுரையை வலியுறுத்திச் சொல்வோம். தாய்ப்பால் கொடுப்பதற்கு என்று சில வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாயின் உடல் மீது சாய்ந்த நிலையில் குழந்தை பால் குடிப்பது அபாயகரமானது. குறிப்பாக தூங்கும் நேரத்தில் நிச்சயம் தரக் கூடாது. இதனால், சுவாசம் தடைபடும் வாய்ப்பு உள்ளது' என்றனர்.












Click it and Unblock the Notifications