மாடியிலிருந்து விழுந்து இறந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: மாடி மீது கிரிக்கெட் விளையாடியபோது தவறி விழுந்து மூளைச்சாவை சந்தித்த கல்லூரி மாணவரின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் முதலிய உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டன.
சென்னை பல்லாவரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெய் ஆனந்த் (18). அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 28-ந் தேதி மாலை 3 அடுக்கு மாடியின் மேல் நண்பர்களுடன் ஜெய் ஆனந்த் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர் ஒருவர் பந்தை வேகமாக அடித்தார். அதை பிடிப்பதற்காக, ஜெய் ஆனந்த் வேகமாக ஓடினார்.
அப்போது தடுமாறி மேலிருந்து விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் துடித்த ஜெய் ஆனந்த்தை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவருக்கு அங்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஜெய் ஆனந்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்து அறிவித்தனர்.
ஜெய் ஆனந்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புக்களை தானம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இது குறித்து ஜெய் ஆனந்தின் சகோதரர் நரேந்திரன் சென்னை அரசு மருத்துவமனை டீன் மோகன சுந்தரத்திற்குத் தெரிவித்தார்.
டீன் மோகன சுந்தரத்தின் உத்தரவுப்படி டாக்டர்கள் குழு உடல் உறுப்பு தானத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ஆனந்தின் இரு கண்களும் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 2 பேருக்கு பொருத்தப்படுகிறது.
இருதய வால்வும், ஒரு சிறுநீரகமும் சென்னை அரசு மருத்துவமனையில் 2 பேருக்கு பொருத்தப்படுகிறது. ஒரு சிறுநீரகம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கு பொருத்தப்படுகிறது. கல்லீரல் குளோபல் மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கு பொருத்தப்படுகிறது என்றனர்.
4வது நபர் ..
சென்னை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவால், உடல் உறுப்பு தானம் செய்த 4-வது நபர் ஜெய் ஆனந்த் ஆவார்.












Click it and Unblock the Notifications