ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத சுரங்கம்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் கணிம சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி சகோதரர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. ஆட்சியில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இரு மாநிலங்களிலும் சட்டவிரோதமாக குவாரிகளை நடத்துவதாக புகார் இருந்து வருகிறது.
ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத குவாரிகளினால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
மேலும், ஆந்திராவில் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி நடத்தி வரும் சுரங்க நிறுவனத்துக்கும் ரெட்டி சகோதரர்களின் நிறுவனங்களுக்கும் கூட்டு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
குறிப்பாக ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஓபலாபுரம் மைனிங் கார்ப்பரேஷனை, ஜனார்த்தன ரெட்டி நடத்தி வருகிறார். இதில், சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுப்பதாக ஆந்திர மாநில எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் விடாமல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில அரசின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது.












Click it and Unblock the Notifications