தனி தெலுங்கானா: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனி தெலுங்கானா விவகாரம் குறித்து முடிவெடுக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனி தெலுங்கானா மாநிலம் கோரி டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தால் ஆந்திராவி்ல் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரஷ்ய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

10 மாவட்டங்கள் முடக்கம்...

இதற்கிடையே டி.ஆர்.எஸ். அழைப்பு விடுத்திருந்த பந்த்தின் 2வது நாளான நேற்றும் 10 மாவட்டங்கள் முற்றிலும் முடங்கிப் போய்க் கிடந்தன.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், மாணவர்களின் அமைப்பும் 2 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன. கடந்த சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

இந்த போராட்டத்தின் தாக்கம் ஹைதராபாத், செகந்திராபாத், அமீர்பேட்டை, பஞ்சகுட்டா உள்ளிட்ட தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் காணப்பட்டது.

முஷீராபாத் பகுதியில் வந்த 2 தனியார் பள்ளிக்கூட வாகனங்களை போராட்டக்காரர்கள் மறித்து, அதில் இருந்த மாணவ-மாணவிகளை கீழே இறங்கி ஓடும்படி கூறினார்கள். பின்னர் அந்த பஸ்களுக்கு தீ வைத்தனர்.

வாரங்கல் மாவட்டம் காசியாபாத் ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலையொட்டி, அந்த ரயிலை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். ஆனால் அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. மேலும் போராட்டக்காரர்கள் மரங்களை வெட்டி, சாலையின் குறுக்கே போட்டு, போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போட்டு இருந்தனர்.

அடிலாபாத் நகரில் உள்ள ஒரு காகித ஆலையின் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதில் அந்த அலுவலகத்தின் ஜன்னல்கள், மேஜை-நாற்காலிகள் உள்ளிட பர்னிச்சர்கள் சேதம் அடைந்தன.

அடிலாபாத் மாவட்டம் காகஜ்நகர் ரயில் நிலையத்தில் டெல்லி சென்ற ரயிலை மறித்து 15 நிமிடங்களாக நிறுத்தி வைத்து இருந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் வந்து போராட்டக்காரர்களை விரட்டி அடித்து, ரெயிலை அனுப்பி வைத்தனர்.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 10 மாவட்டங்களும் முடங்கின.

பஸ்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தலாம், கல் வீசி தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக முழு அடைப்பு போராட்டம் நடந்த 10 மாவட்டங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பல ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

உஸ்மானியாவில் புகுந்து போலீஸ் தடியடி...

இந்த நிலையில் பிரபலமான உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நேற்று அதிரடிப்படையினர் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இங்கிருந்து சட்டசபைக்கு மாணவர்கள் ஊர்வலம் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

மேலும், மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்துக்கு இந்த கல்லூரி வளாகம்தான் நரம்பு மண்டலமாக இருந்து செயல்படுவதாகவும் போலீசார் கருதினார்கள். ஆகவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க, அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் ஆணையாளர் பி.பிரசாத ராவ் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுடன் போராட்டக்காரர்களும் மாணவர்களின் விடுதிகளில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவர்கள் அல்லாதவர்களை கண்டு பிடிக்க, மாணவர்களின் அடையாள கார்டுகளை வாங்கி போலீசார் சோதனை போட்டனர். மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நகர் முழுவதும் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் 1000க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

இந்த நிலையில் பா.ஜ.க. சட்டசபை தலைவர் கிஷன் ரெட்டி எம்.எல்.ஏ, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டசபை தலைவர் இ.ராஜேந்தர் எம்.எல்.ஏ., சந்திரசேகர ராவின் மைத்துனர் ஹரிஷ் ராவ் எம்.எல்.ஏ. மற்றும் ஒரு எம்.எல்.சி. ஆகியோர் அந்த பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். பல்கலைக்கழகத்துக்குள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை பார்த்து ஆறுதல் கூற அவர்கள் வந்தனர்.

அவர்களை பல்கலைக்கழகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை மீறி பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி, கோஷம் போட்டனர். அவர்களும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், அவர்களை தடுத்து, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த மாணவர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்கினார்கள். போலீசார் தடியடியில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

தெலுங்கானா மாவட்டங்களில் உள்ள வக்கீல்கள், நேற்று உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து கோர்ட்டுகளையும் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்தனர்.

நாயுடுவுக்கு எதிர்ப்பு...

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நிம்ஸ் மருத்துவமனைக்கு வந்து சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார்.

அவரது வருகையை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா மிரட்டல்

இந்த நிலையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் மிரட்டியுள்ளதால் ஆந்திர அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா அலட்டிக் கொள்ளாமல் இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை என்ற பெயரில் அவர் இழுத்தடிப்பு செய்வதாக ஆந்திர மாநில காங்கிரஸார் கருதுகின்றனர். தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆந்திர அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

குறிப்பாக ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி, தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கே.வெங்கடரெட்டி, நீர்ப்பாசன அமைச்சர் கே.சுனிதா லட்சுமரெட்டி, கல்வி அமைச்சர் டி.ஸ்ரீதர்பாபு, சிறு தொழில் அமைச்சர் டி.கே.அருணா, மருத்துவ கல்வி அமைச்சர் சுதர்சன்ரெட்டி ஆகியோர் காங்கிரசின் கொள்கை முடிவுகளை எதிர்க்கின்றனர்.

இவர்கள் அனைவரும் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன் மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல்வர் ரோசய்யா தெலுங்கானா விஷயத்தில் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என இவர்கள் கோரி வருகின்றனர். மேலும், உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதற்கும் இவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று முதல்வர் ரோசய்யாவை சந்தித்த இவர்கள், தடியடி நடத்த உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி ஸ்டீபன் ரவீந்திராவை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

முன்னதாக அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கானா கோரிக்கையை வலுப்படுத்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று கூறினார்கள்.

சபீதாரெட்டி கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எங்கள் பேச்சை யாரும் கேட்பது இல்லை. எனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார். இவர் ராஜசேகர ரெட்டியை தனது அண்ணனாக தத்தெடுத்துள்ளதாக அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் வெங்கடரெட்டி கூறுகையில் மாணவர்களை ஓட ஓட விரட்டி தடியடி நடத்துவதை ஏற்க முடியாது. இதற்காக மந்திரி பதவி போனாலும் பரவாயில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+