பசில், கோத்தபயா, வீரதுங்க இன்று டெல்லி வருகை
கொழும்பு: மகிந்தா ராஜபக்சேவின் தம்பிகளான பசில் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே மற்றும் ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோர் இன்று அவசரமாக டெல்லி விரைகின்றனர்.
டெல்லி வரும் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்திக்கின்றனர். பிறகு முக்கியமாக, எம்.கே.நாராயணனையும் சந்தித்து முக்கிய ஆலோசனையை நடத்தவுள்ளனராம்.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்த்தும் உடன் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரும் இந்தியா விரைந்துள்ளார்.
இந்த பயணத்திற்கு முன்பாக நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் காந்த் ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிடக் கூடாது என்று அப்போது இந்தியத் தரப்பில் ஆலோசனை தரப்பட்டதாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தனியாக வேட்பாளரை நிறுத்தும் யோசனையில் அந்த அமைப்பு தற்போது உள்ளது என்பதால் அப்படி நிறுத்தப்பட்டால், ராஜபக்சே, பொன்சேகா ஆகிய இருவரும் நட்டாற்றில் விடப்பட்டு தேர்தல் முடிவுகள் கந்தரகோலம் ஆகி விடும் என்பதால் இந்தியா பதறியடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications