கலைத்துறைக்காகவும் பாடுபடுவேன்-கருணாநிதி
சென்னை: வாழும் காலமெல்லாம் கலைத்துறைக்காகவும் கலைஞர்களுக்காகவும் பாடுபடுவேன் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
2007, 2008-ம் ஆண்டுகளின் சிறந்த திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவில் வழங்கிய முதல்வர் கருணாநிதி பேசியது:
உடல் நலமில்லாமல் இருந்தாலும் வருவேன்!
உடல்நலம் சிறிது குன்றியிருந்தாலுங்கூட, காலையிலேயிருந்து மாலை 5.30 மணி வரையிலே தூக்கத்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இந்த அரங்கத்திற்கு உரிய நேரத்திலே வர இயலாமல் சற்றுத் தாமதமாக நான் வரநேரிட்டது.
தாமதமாக வந்தாலும் நிச்சயம் வருவேன் என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில், நான் வருகின்ற வரையிலே அமைதியாக இருந்து நம்முடைய கலையுலக நட்சத்திரங்களுக்கு நாம் காட்ட வேண்டிய நன்றி உணர்வை, மரியாதையை காட்டியுள்ள இந்த மாமன்றத்திலே வீற்றிருக்கின்ற தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியை, என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழா போல பல விழாக்கள் கலையுலகின் சார்பில் நடைபெற்றிருக்கின்றன. ரஜினி குறிப்பிட்டதைப் போல இன்று எப்படி அவரும், கமலும் என் இருபுறத்திலும் வீற்றிருக்கிறார்களோ, அதைப்போல மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் என் இரு புறத்திலும் வீற்றிருந்து கலை நிகழ்ச்சிகளை நடத்திய அந்தக் காலம் - அரசியல் அரங்கங்களில் வீற்றிருந்த அந்தக் காலம் - என் நினைவுக்கு வராமல் இல்லை.
ரஜினி - கமல் பொறாமைப்படும் அளவுக்கு...
நான் ரஜினியையும், கமலையும் பார்த்து வியப்புறுகிறேன். ஏறத்தாழ இங்கே எழுபதுக்கு மேற்பட்டவர்கள் பரிசுகளை, விருதுகளை, பொற்காசுகளைப் பெற்ற அந்த நிகழ்ச்சியின் போது ஒரு இளம் பெண் - நான் யார் தெரிகிறதா? நான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி (அணுவர்தன்) என்று சொல்லி, அந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.
கலைவாணர் என்.எஸ்.கே. காலத்திலிருந்து இன்றைக்கு ரஜினி, கமல் காலம் வரையில் - கமலைப் போன்றவர்கள், ரஜினியைப் போன்றவர்கள் பலரும் இடையிடையே வந்திருந்தாலும், இந்தக் காலம் வரையில் தொடர்ச்சியாக இருக்கின்ற ஒரு கலைஞன் நான் என்பதை அவர்கள் இருவரும் பொறாமைப் பட வேண்டும் என்பதற்காகச் சொல்லிக் கொள்கிறேன்.
ஏ, அப்பா எவ்வளவு காலமாக இந்தக் கலையுலகத்திலே இருக்கிறார் இந்த மனுசன் - இருந்துங்கூட மனம் ஒடிந்து போகாமல், உடல் சோர்ந்தாலுங்கூட, உள்ளம் சோராமல் இன்றைக்கு வந்து, இந்த விழாவினை நடத்திக் கொடுத்திருக்கிறாரே என்று அவர்கள் வியப்படைகிறார்கள்.
சோர்வை அகற்றும் இடம் கலைவிழாக்கள்தான்!
எனக்கு அரசியலில் - பொது வாழ்வில் ஏற்படுகின்ற சோர்வையெல்லாம் அகற்றுகின்ற இடம் கலைஞர்களாகிய நீங்கள் கூடி இருக்கின்ற இடம்தான் என்பதை ஒன்றல்ல, இரண்டல்ல பல முறை சொல்லியிருக்கிறேன்.
உங்களுடைய நடிப்பாற்றல் மாத்திரமல்ல, மனிதநேயம், மனித உணர்வு, மனிதர்களை நேசிக்கின்ற தன்மை, நன்றி உணர்வு இவைகள் எல்லாம் இந்தத் திரையுலகத்திலே, கலையுலகத்திலே பல ஆண்டு காலமாக நான் கண்டுகளித்து இந்த உலகத்திற்கும் நாம் சேவை செய்தாக வேண்டும், பணியாற்றியாக வேண்டும் என்ற அந்த அவாவுடனேதான் இந்த மிகப்பெரும் விழாவிலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை பெற வேண்டுமென்று என்ன நேர்ந்தாலும் உடலுக்கு - என்ன நேர்ந்தாலும் என் உயிருக்கு; என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் - எப்படி அரசியல் வாழ்க்கையிலே, பொது வாழ்க்கையிலே என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேனோ, அதைப் போல அந்த வாழ்வுக்கு மருந்தாக இருக்கின்ற உங்களை நான் நிச்சயமாகப் புறக்கணிக்க மாட்டேன், அலட்சியப்படுத்த மாட்டேன் என்பதற்கு அடையாளமாகத்தான் - காலையிலிருந்து எனக்கேற்பட்ட உடல் அசதிக்கு - உடல் நலிவுக்கு ஐந்தாறு மருத்துவர்கள் வந்திருந்து சிகிச்சை அளித்த போதிலும், அந்தச் சிகிச்சையில் எல்லாம் பெரிய சிகிச்சையாக - அவர்கள் தந்த மருந்தையெல்லாம் வெல்லுகின்ற மருந்தாக இந்த விழா எனும் மருந்து எனக்கு அமைந்தது.
ரஜினியும் கமலும் என்றைக்கும் சிறந்த நடிகர்கள்தான்!
இந்த நிகழ்ச்சியிலே ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் என்பதற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கிய காரணத்தால் தான் அவர் சிறந்த நடிகர் என்பதல்ல. என்றைக்கும் அவர் சிறந்த நடிகர் தான். அதைப் போல கமல்ஹாசனுக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. என்றைக்கும் அவர் சிறந்த நடிகர்தான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்- எனக்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது வழங்கப்படாவிட்டாலும், நான் சிறந்த உரையாடல் ஆசிரியர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஒரு பத்திரிகையிலே கூட இன்றைக்கு காலையிலே பார்த்தேன். அதை பார்த்ததால் உடல் நலிவு ஏற்படவில்லை. ஒரு கேலிச் சித்திரம் போட்டு, முதல்வர் தனக்கு தரப்படுகின்ற விருதை யாருக்கு கொடுப்பார், அவரே நடத்துகின்ற நிகழ்ச்சியில், அவரே விருதை எடுத்துக் கொள்வதாக ஒரு கற்பனை கேலி சித்திரத்தை- தாக்குவதற்காகவோ அல்லது கேலியாகவோ அந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்த போது எனக்கு அவர்கள் எதிர்பார்த்த சிரிப்புதான் வந்தது. சிரிப்பதற்காகத்தானே கார்ட்டூன் போடுவது? அவர்கள் எதிர்பார்த்த சிரிப்புதான் எனக்கு வந்தது.
கலைத்துறைக்கு ஆகவேண்டியதை...
கலையுலக வித்தகர்களுக்கு, கலைஞர்களுக்கு, கலையிலே இன்னும் மேம்பட்டு விளங்கி வருபவர்களுக்கு மேலும் மேலும் உற்சாகம் அளிக்கின்ற வகையிலே இந்த கலைத்துறைக்கு ஆகவேண்டிய எல்லா பணிகளையும் நான் ஆற்றி வருகிறேன்.
தமிழிலே பெயர் வைக்கின்ற படங்களுக்கு கேளிக்கை வரியே கிடையாது என்ற ஒரு நிலையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். இதுபோன்ற மன்றங்களுக்கு முன்பெல்லாம் படப்பிடிப்பு என்றால், அதற்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை மிகக் குறைவாக ஆக்கி- வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.
அவர்களுடைய தொழிலுக்கு இன்றைக்கு முக்கியமான மூச்சாக, உயிராக இருக்கின்ற தொழிலாளர்களுக்கு, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்- கடந்த விழாவிலே கூட நம்முடைய ரஜினியும், வேறு நடிகர்களும், நண்பர்களும் எடுத்துக் காட்டியதைப் போல அந்தத் தொழிலாளர்கள் எல்லாம் வாழ்வதற்கான ஒரு அருமையான இடத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள், நாங்கள் வழங்குகின்றோம் என்று குறிப்பிட்டேன்.
குகநாதன் அந்த இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடம் பற்றிய விவரங்களை நிதித்துறை செயலாளரிடம்- நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க இருவரும் பேசி, அந்த இடத்தை அவர்களுக்குத் தருவதாக வாக்களித்து, விரைவில் அந்த இடம் அவர்களுக்கு உரியதாக ஆகி, அதிலே அவர்கள் எல்லாம் குடியமர்ந்து இதுபோன்ற ஒரு விழாவிலே நம்மையெல்லாம் பாராட்டவிருக்கிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழுங்காலம் எல்லாம் திரையுலகத்துக்காக...
இப்படி திரையுலகத்திலே உச்சி முதல் உள்ளங்கால் வரையில் என்பதைப் போல்-உள்ளங்கால் இல்லாவிட்டால் உச்சி இல்லை என்பதை உணர்ந்து- அந்த உள்ளங் காலையும் போற்றி- உச்சியையும் வாழ்த்தி- நான் இந்த கலையுலகத்திலே வாழுங்காலம் எல்லாம் என்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆக வேண்டிய காரியங்களைச் செய்வேன் என்று குறிப்பிட்டு- கலை உணர்வு இன்னும் என்னுடைய உடலிலே ஊறிக் கொண்டிருக்கின்றது- ஏனென்றால் சின்னக் குழந்தையாக நான் இருக்கும்போது கலை உணர்வால் நான் பாதிக்கப்பட்டவன்.
எங்கள் ஊர் திருக்குவளை கோவிலில் ஒரு உற்சவம் நடைபெற்றால், அதைப் பார்த்துவிட்டு வந்து, அதே உற்சவத்தை என்னுடைய வீட்டில் நடத்திக் கொண்டிருக்கின்ற அளவுக்கு கலை ஆர்வம் சின்னக் குழந்தையாக இருந்தபோதே எனக்கு இருந்தது. அந்தக் கலையார்வம் தொடர்கின்ற காரணத்தினாலேதான் இன்றளவும் கலையுலகத்திலே ஏறத்தாழ எண்பது படங்கள் எழுதிமுடித்த பிறகும்கூட இப்பொழுதும் 81-வது படத்துக்கு உரையாடல் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
பணம் தரவில்லையே!
அப்படி தீட்டப்படுகின்ற உரையாடல்களுக்காக கிடைக்கின்ற வருமானத்தை நான் எனக்காக வைத்துக் கொள்ளாமல்- என்னுடைய குடும்பத்துக்காக செலவழிக்காமல்- அதை கலைக்குடும்பங்கள் வாழவும், ஏழை எளிய நலிவற்ற குடும்பங்கள் வாழவும் அந்த நிதியை முதலமைச்சர் நிவாரண நிதி மூலமாக வழங்கி விடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதைப்போல் இங்கேயும் ஏதாவது ஒரு லட்சம், இரண்டு லட்சம் தருவார்கள், அதை இயல், இசை, நாடக மன்றத்துக்கே வழங்கலாம் என்று வந்தேன். ஆனால் அப்படி அவர்கள் எதுவும் தரவில்லை. அவர்கள் ஒரேயொரு மாலையைத்தான் போட்டிருக்கிறார்கள். அந்த மாலை, தங்கத்தால் ஆன ஒரு பதக்கத்தை கொண்ட மாலை. இப்போது தங்கம் என்ன விலை என்பதை எண்ணிப் பார்த்து, பரவாயில்லை இது உயர்ந்த மாலைதான் என்றெண்ணி இதை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒன்றை மாத்திரம் கலையுலகத்தின் நினைவாக- கலையுலகக் காவலர்கள் என்பால் காட்டுகின்ற அன்பின் நினைவாக- இந்த விருதை எனக்குக் கொடுத்தார்களே ரஜினியும், கமலும் மற்ற கலைஞர்களும் அவர்களுக்கு நான் செலுத்தின்ற மரியாதையாக- அதை உடனடியாக யாருக்காவது கொடுத்துவிட்டால், அவர்கள் எனக்கு அணிவித்ததற்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.
ஆகவே அதைக் கொடுக்காமல் அவர்களை என்னுடைய நெஞ்சிலே வைத்திருப்பதைப் போல, கலையுலக மக்களையெல்லாம் என்னுடைய நெஞ்சிலே வைத்திருப்பதைப் போல இதை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன், இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன், என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications