திமுகவுக்கு தேர்தல் வேலை பார்க்கும் அதிகாரிகள்-தா.பா
தூத்துக்குடி: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அரசு அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்த்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செந்தூர் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
திமுகவினர் ஆட்சியின் சாதனையை சொல்லி ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு அதிகாலை நேரத்தில் வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். இதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கிறது.
தேர்தல் விதிமுறைகளை திமுகவினர் தொடர்ந்து மீறி வருகின்றனர். இதனால் இங்கு ஜனநாயகமே கேலிக் கூத்தாக்கிவிட்டது. இது மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.
தேர்தலில் நியாயமாக செயல்பட வேண்டிய காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், ஆளும் கட்சிக்கு ஆதரவாக வேலை செய்து வருகின்றனர். தற்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் அரசு அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
இதையும் தாண்டி தங்களுக்கு வாக்களிக்காத வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கி விட்டார்கள். அதற்கு காரணமாக, இடம் பெயர்ந்து விட்டார்கள், இறந்து போனார்கள் என பொய்யான காரணத்தைச் சொல்லியுள்ளனர்.
இதை எல்லாம் கவனிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. அதனால் தான் நாங்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறோம்.
வந்தவாசியில் திமுக பிரமுகரின் கார் எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான அன்று நான் அங்கு தான் இருந்தேன். அந்தக் காருக்கு ஆர்.சி.புக் கிடையாது. கார் எரிந்த விவகாரம் தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதற்கு அரசின் பதில் என்ன? என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications