இலங்கை அதிபர் தேர்தல்-சிவாஜிலிங்கம் போட்டி
கொழும்பு: தமிழர்களால் பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது, ராஜபக்சேவையும் ஆதரிக்க முடியாது. எனவே நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான சிவாஜி லிங்கம் அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இருப்பினும் தமிழ் கட்சிகள் அதிபர் தேர்தல் நிலைப்பாடு குறித்து இன்னும் முடிவு செய்யாமல் குழம்பிய நிலையில் உள்ளன.
முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அக்கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள எம்.பியான சிவாஜி லிங்கம், சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று கொழும்பில் டெபாசிட் தொகையைத் தாக்கல் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜபக்சேவும் சரி, பொன்சேகாவும் சரி இருவரையும் ஆதரிக்க தமிழர்களிடம் எந்தக் காரணமும் இல்லை. அதில் எந்த பயனும் இருக்கப் போவதில்லை. எனவேதான் நான் போட்டியிட முடிவு செய்தேன்.
சுயேச்சையாக நான் போட்டியிடுகிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்திலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவாஜிலிங்கம்.
செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ அமைப்பின் மூத்த உறுப்பினர் சிவாஜி லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications