புத்தாண்டு: டிச. 31ம் தேதி நள்ளிரவில் கோயிலைத் திறக்க இந்து முன்னணி எதிர்ப்பு
சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோயில்களை திறக்கக் கூடாது. அவ்வாறு திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது என்று இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 'இந்து மதத்திற்கும், ஆங்கில புத்தாண்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்து முறைப்படி நாள் தொடங்குவது சூரிய உதயத்தில் இருந்து தான். நள்ளிரவில் இந்துக்களின் நாட்கணக்கு தொடங்குவதில்லை. கிறிஸ்தவர்களுக்கு தான் ஆங்கில புத்தாண்டு. அவர்களது கணக்குபடி தான் நள்ளிரவில் நாள் தொடங்குகிறது. இதெல்லாம் மதசார்பற்ற அதிகாரிகளால் இயங்கும் அறநிலையத் துறைக்கு தெரியவில்லை.
கோவில்கள் வியாபாரத் தலங்கள் அல்ல. இந்துமத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பு மற்றும் இந்துக்களுக்கு ஆத்ம அமைதியைக் கொடுக்கும் இடம் ஆகும். எனவே, பணத்திற்காக ஆகமவிதிக்கு புறம்பாக ஜனவரி 1ம் தேதி நள்ளிரவில் கோவில்களை திறக்கக்கூடாது.
அதையும் மீறி கோவில்கள் திறக்கப்பட்டால் ஆகம விதிகளைக் காப்பதற்காக இந்து முன்னணியினர் தமிழ்நாடு முழுவதும் கோவிலை பூட்டும் போராட்டத்தில் பூட்டு, சாவியுடன் ஈடுபடுவார்கள். கோவில்களில் பதட்டத்தை தவிர்க்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications