நெல்லையில் அதிகரிக்கும் விஷகாய்ச்சல் சாவுகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறுவன், சிறுமிகள் உள்பட இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து தமிழக சுகாதார துறை இயக்குனர் நாளை நெல்லையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பல இடங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை. மேலப்பாளையம் மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் இறந்ததை அடுத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். சுகாதா வசதியை மேம்படுத்த வேண்டுமென கூறி போராட்டம் நடத்தினர். கடையநல்லூர் பகுதியில் மட்டும் வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சங்கரன்கோவில் பகுதியில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், தமிழக சுகாதார துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ நாளை (3ம் தேதி) நெல்லை வருகிறார்.
வைரஸ் காய்ச்சல் தொடர்பான ரத்த பரிசோதனை செய்வதற்கு வேலூரில் இருந்து மருததுவர்கள் அடங்கிய குழுவினரும் நாளை நெல்லை வருகின்றனர்.












Click it and Unblock the Notifications