லிங்கம் கொலை குற்றவாளி வெட்டிக்கொலை- கூட்டாளிகளே கதையை முடித்தனர்
நாகர்கோவில்: பிரபல ரவுடி லிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட 'தாதா' பெருவிளை மோகன் பட்டப்பகலில் தனது கூட்டாளிகளாலேயே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டான.
கடந்த 1996ம் ஆண்டு நாகர்கோவில் சிறையில் புகுந்து பிரபல ரவுடி லிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ரவுடி பெருவிளை மோகன், பெரிய தாதாவாக உருவாகி, போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டு தொடர்ந்து பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான்.
இந் நிலையில் மோகன் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள மது பாரில் கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தினான். பின்னர் முழு போதையில் மோட்டார் சைக்கிளில் புறப்பட மோகன் தயாரானான்.
அப்போது உடனிருந்த கூட்டாளிகளில் ஒருவர் திடீரென மோகனின் முதுகில் குத்தினார். நிலை குலைந்து திரும்பிய மோகனை மற்ற கூட்டாளிகளும் சூழ்ந்துகொண்டு சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
மோகனை தலை, முகம், கழுத்து என பல இடங்களிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து மோகன் இறந்தான்.
பட்டபகலில் பலரும் நடமாடிக்கொண்டிருந்த வேளையில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். மோகனை தாக்கியவர்களும் கூட்டத்தோடு கூட்டமாக நழுவி விட்டனர்.
வடசேரி போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட ரவுடி மோகன் மீது ஆள் கடத்தல், வழிப்பறி மற்றும் 4 கொலை வழக்குகள் உள்ளன. கோட்டாறு, வடசேரி, இரணியல் மற்றும் நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.












Click it and Unblock the Notifications