சமாஜ்வாடியிலிருந்து ஏன் விலகினார் அமர்சிங்?

Subscribe to Oneindia Tamil

Amar
லக்னோ: சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவின் கோபம் மற்றும் கட்சியில் அவருக்கு எழுந்த எதிர்ப்பில் காரணமாகத்தான் கட்சியிலிருந்த விலக அமர்சிங் முடிவு செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அமர்சிங், கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்வதாக புதன்கிழமை அறிவித்தார். பொதுச் செயலாளர், செய்தித் தொடர்பாளர் மற்றும் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஆகிய 3 பதவிகளையும் அவர் ராஜிநாமா செய்துள்ளார்.

ராஜிநாமா கடிதத்தை அவர், கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பினார். துபாயில் உள்ள அமர்சிங் இந்தத் தகவலை தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

என்ன காரணம்...?

அமர்சிங் பதவி விலக முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது.

முலாயமுக்கு அடுத்தபடியாக சமாஜ்வாடிக் கட்சியில் பெரிய தலைவராக காட்டப்பட்டவர் அமர்சிங். சில சமயம் முலாயமையே கூட மிஞ்சும் வகையி்ல் அவரது செயல்பாடுகள் இருந்தன. அமர்சிங்தான் சமாஜ்வாடிக் கட்சியின் உண்மையான தலைவரோ என்று எண்ணும் அளவுக்கு முந்திரிக்கொட்டையாக அனைத்து விவகாரத்திலும் மூக்கை நீட்டுபவர் அமர்சிங்.

பிற கட்சிகளுக்கும், முலாயம் சிங்குக்கும் இடையிலான தூதுவராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால், இவரை காங்கிரஸ் தரப்பு ஒதுக்கியே வைத்தது.

முலாயமின் வலது கரம், இடது கரம், இடது கால், வலது காலாக திகழ்ந்து வந்தவர் அமர்சிங். இப்படி முலாயமுடன் நெருக்கமாக இருந்து வந்த அமர்சிங்குக்கும், முலாயமுக்கும் இடையே சமீபகாலமாக பல்வேறு பிரச்சினைகளில் முட்டல்கள், மோதல்கள்.

இந்த மோதல், சமீபத்தில் நடந்த மக்களவை இடைத் தேர்தலில் விஸ்வரூபம் எடுத்தது. அங்கு முலாயமின் மருமகளும், மகன் அகிலேஷின் மனைவியுமான டிம்பிள் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேசமயம், சமாஜ்வாடியிலிரு்நது விலகி, காங்கிரஸில் இணைந்து போட்டியிட்ட ராஜ் பாப்பர் வெற்றி பெற்று விட்டார்.

இந்தத் தோல்வி முலாயம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் முலாயம் குடும்பத்தினர் மெத்தனமாக இருந்ததாலதான் டிம்பிள் தோற்றார் என்று கருத்து கூறியிருந்தார் அமர் சிங். இது முலாயம் குடும்பத்தினரை டென்ஷனாக்கி விட்டது.

ஏற்கனவே ஜெயப்பிரதாவுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக அமர்சிங்குக்கும், முலாயம் குரூப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அன்று ஏற்பட்ட உரசல் விரிசலாகி இப்போது ஒட்ட வைக்க முடியாத அளவுக்கு அகலமாகி விட்டதால்தான் அமர்சிங் விலக முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

தனது விலகலுக்கு உடம்பு சரியில்லை என்று அமர் சிங் காரணம் கூறியிருந்தாலும் கூட, முலாயம் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே இப்போது நேரம் சரியில்லை என்பதே உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமர்சிங்கின் முடிவு குறித்து அமர்சிங்கின் முன்னாள் நண்பர்களான பேனி பிரசாத் வர்மா, ராஜ்பாப்பர், ஆஸம்கான் (இவர்தான் அமர்சிங்கின் சறுக்கலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்- ஜெயப்பிரதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியதன் மூலம்) ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேனி பிரசாத் வர்மா கூறுகையில், ஸ்டண்ட் அடிப்பதில் அமர்சிங் பெரிய ஆள். எங்கே அடித்தால் முலாயமுக்கு வலிக்கும் என்பது அவருக்குத் தெரியும். இந்த டெக்னிக்கை தேவைப்படும்போதெல்லாம் அவர் பயன்படுத்துவார். இப்போதும் பயன்படுத்துகிறார், அவ்வளவுதான் என்றார்.

இந்த மூன்று தலைவர்களும் சமாஜ்வாடிக் கட்சியில் இருந்தவர்கள். முலாயமுக்குப் பக்கத்தில் கூட நெருங்க விடாமல் அமர்சிங் அடை காத்துக் கொண்டிருந்ததால் கடுப்பாகி கட்சியை விட்டுப் போனவர்கள் இவர்கள்.

அமர்சிங், கட்சித் தலைமை மீது சம்மணக் கால் போட்டு ஜம்பமாக உட்கார்ந்து கொண்டு நாட்டாமை செய்வதை அகிலேஷ் யாதவ், முலாயமின் சகோதரர் ராம் கோபால் யாதவ் ஆகியோரும் கூட விரும்பவில்லை.

சமயம் பார்த்து அமர்சிங்கை கழற்றி விடவே இவர்கள் தீவிரமாக இருந்து வந்தனர். தற்போது தானாகவே விலகிக் கொண்டு விட்டார் அமர்சிங்.

அமர்சிங் விலகுவதாக கூறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே மூன்று முறை இப்படிக் கூறியவர்தான். ஆனால் முலாயம் சிங், அமரை சமாதானப்படுத்தியதால் தொடர்ந்து வந்தார். ஆனால் தற்போது அப்படி நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ஆனால் மறுபக்கம் சென்டிமென்டலாக பேசி வருகிறார் அமர்சிங். சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தபோது தனது நண்பர்களும், குடும்பத்தினரும்தான் உடன் இருந்தார்கள், கட்சி தனக்கு துணையாக இல்லை என்றும் தனது ராஜினாமா குறித்த பேட்டியில் அமர்சிங் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

எனக்கு 53 வயதாகி விட்டது. இந்த சமயத்தில் எனது உடல் நலனிலும், எனது மனைவி, மகள்கள் குறித்தும் நான் கவலைப்படுகிறேன். அவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அமர்சிங் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+