போலி என்கவுண்டர்-மும்பை இன்ஸ்பெக்டர் கைது
மும்பை: என்கவுண்டர் என்ற பெயரில், தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி ஒருவரை, வேண்டும் என்றே கொன்றதாக மும்பை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பிரதீப் சர்மா. என்கவுண்டர் மூலம் பல்வேறு தாதா கும்பல்களை இவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியுள்ளார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை இவர் காக்கா, குருவி போல சுட்டுத் தள்ளியுள்ளார்.
அப்படி அவரால் சுடப்பட்டவர்களில் ஒருவர்தான் லகான் பையா. இவர் பிரபல தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி ஆவார். கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பையா சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெர்சோவா பகுதியில் வைத்து பையாவை சுட்டுக் கொன்றார் சர்மா. பையா பதுங்கியிருப்பது தெரிய வந்து அங்கு சென்றதாகவும், அப்போது தன்னை பையா சுட முயன்றதால் தற்காப்புக்காக அவரை சுட்டுக் கொன்றதாகவும் சர்மா வாக்குமூலம் அளித்திருந்தார்.
பையா சுட்டுக் கொல்லப்பட்ட போது இரவு 8.15 மணி ஆகும். ஆனால் அன்றைய தினம் மதியம் 1 மணியளவில் பையா வீட்டுக்கு வந்த போலீஸார், அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, இரவு சுட்டுக் கொன்று விட்டதாக பையாவின் சகோதரரும், வக்கீலுமான ராம்பிரகாஷ் புகார் கூறினார்.
மேலும், பையாவை போலீஸார் கடத்திச் சென்றது குறித்து மும்பையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தந்தி மூலம் தெரிவித்தார். மாலை 4 மணிக்கே இந்த தந்திகள் உரியவர்களுக்குப் போய் விட்டன.
மேலும் பையாவின் மனைவி, தனது கணவரை காணவில்லை என்று 4.43 மணிக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் 8.15 மணிக்கு அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பையா கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் போலீஸார் மீது பையாவின் மனைவி புகார் கொடுத்தார். ஆனால் அதை போலீஸார் நிராகரித்து விட்டனர்.
இதையடுத்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணையில், போலி என்கவுண்டரில் பையா சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. மேலும், இன்ஸ்பெக்டர் சர்மா, மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 போலீஸாருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து இவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், சர்மா மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 போலீஸாரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications