உண்ணாவிரதம்: ஸ்ரீரங்கம் ஜீயர் மட சீடர்கள் கைது
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஜீயர் மட சீடர்கள் சங்கத் தலைவர் உள்பட நான்கு பேர் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் உள்ளது பலஹரி புருஷோத்தம ராமனுஜ ஜீயர் மடம். இந்த மடத்தில் சமையலராக பணியாற்றியவர் பத்ரி.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் சன்னதியை திறக்க முயன்ற பக்தர்களை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸில் மடத்தின் சீடர்கள் சங்கத் தலைவர் கோவிந்தராமானுஜ தாஸா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால், பத்ரியை கைது செய்யக் கோரி, ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருக்க கோவிந்தராமனுஜ தாஸா சீடர்களுடன் ஊர்வலமாக வந்தார்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே வந்த போது, அவர்களை வழியிலேயே மடக்கிய ஸ்ரீரங்கம் போலீசார் கோவிந்தராமனுஜ தாஸா உட்பட நான்கு பேரை கைது செய்தனர். அதன் பின்பு, அவர்களை விடுதலை செய்தனர்.
கோயிலில் பக்தர் உண்ணாவிரதம்:
இதற்கிடையே, தஞ்சை பெரிய கோவில் முன்பு உண்ணாவிரதம் இருந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அடுத்த திருக்கண்ணங்குடியை சேர்ந்தவர் கணேசன் (35). இவர், தஞ்சாவூர் பெரிய கோவில் முன் அமர்ந்து, திடீர் உண்ணாவிரதத்தை துவங்கினார்.
தஞ்சை பெரிய கோவிலுக்குள் 63 நாயன்மார்கள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும், திருவேதிக்குடி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கபிஸ்தலம் பெருமாள் கோவிலில் 10 நாள் பூஜை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர் திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
தகவலறிந்த போலீசார், அனுமதி இன்றி உண்ணாவிரதம் இருந்ததாக அவரை கைது செய்தனர். இவர் இதே போன்று வேதாரண்யம் உட்பட பல இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications