தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.-விசாரணைக்கு திட்டம்

Subscribe to Oneindia Tamil

Shooting down Tamils
ஐ.நா.: சிங்கள ராணுவ வீரர்கள், தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும், கைகளையும் கட்டி வைத்து பின்னால் இருந்தபடி கொடூரமாக சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே என்று சட்டவிரோத கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகளுக்கான ஐ.நா. சிறப்புப் பிரிவு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தனி விசாரணையை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை அரசுக்கு சிக்கல் மேலும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பான் கி மூன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டு உலகை அதிர வைத்தது. ஹிட்லர் காலத்தை விட மிக மோசமான கொடூரமான இந்த இனப்படுகொலை அனைவரின் உள்ளங்களையும் பதறடித்தது.

இந்த நிலையி்ல் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை, அதன் உண்மைத்தன்மை குறித்து பிலிப் ஆல்ஸ்டன் விசாரணை நடத்தி வந்தார். தனது
விசாரணையை முடித்துள்ள ஆல்ஸ்ட்ன் அறிக்கையை ஐ.நா.விடம் ஒப்படைத்துள்ளார்.

வீடியோ உண்மையானதே ...தனது விசாரணை அறிக்கை குறித்து ஆல்ஸ்டன் கூறுகையில்,

தமிழர்களை இலங்கை வீரர்கள் சுட்டுக் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே, நம்பகமானதே. உடனடியாக இதுகுறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இனியும் இதில் காலதாமதம் இருக்கக் கூடாது.

யார் இந்த விசாரணையை நடத்துவது என்பது குறித்து நான் கூற முடியாது. ஆனால் நிச்சயம் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் ஆல்ஸ்டன்.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். கொத்து வெடிகுண்டுகளை வீசியும், புல்டோசர்களை ஏற்றியும் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஐ.நா.வின் கணிப்புப் படி கடைசிக் கட்டத்தில் 7000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் போரின்போது இலங்கை ராணுவம் செய்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகள் குறித்தும் செய்திகள் வந்தன. ஆனால் ஐ.நா. உள்பட எந்த உலக அமைப்பும் இதுகுறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை.

மேலும், சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை மண்டியிட வைத்து இரக்கமின்றி கொன்று குவித்ததாக செய்திகள் வந்தன.

இதற்கு உத்தரவிட்டவர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயாதான் என்றும் ராணுவத் தளபதியாக இருந்தவரும், இப்போது அதிபர் பதவிக்காக போட்டியிடுபவருமான பொன்சேகா கூறியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சமயத்தில்தான் கடந்த ஆண்டு சானல் 4 டிவியில் தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாகக் கொல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியது. இது இலங்கை ராணுவத்தின் கொடூரச் செயல்களின் ஒரு துளியாக கருதப்படுகிறது.

தனது விசாரணை குறித்து ஆல்ஸ்டன் மேலும் கூறுகையில், 3 அமெரிக்க தடயவியல் நிபுணர்களின் உழைப்பின் மூலம் கொடூரக் கொலைகள் அடங்கிய வீடியோ உண்மையானதே என்பதை கண்டறிந்துள்ளோம்.

இந்த வீடியோ பொய்யானது, திரிக்கப்பட்டது, புனையப்பட்டது என்று இலங்கைத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொன்ன அனைத்துமே உண்மை இல்லை என்பதை எங்களது விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

இந்த வீடியோ கடந்த 2009, ஜனவரி மாதம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் கேமரா மூலம் இது படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வரும் காட்சிகளும், அதில் இடம் பெறும் துப்பாக்கிகளும் உண்மையானவையே. இதை 3 தடயவியல் நிபுணர்களும் உறுதிப்படுத்துள்ளனர்.

இந்த வீடியோவில் மிக நெருக்கத்தில் வைத்து இருவர் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் உண்மையானதே. அதில் எந்த திரிபும் இல்லை.

இருப்பினும் வீடியோவில் உள்ள சில காட்சிகள் குறித்து புரியவில்லை. ஆனால் இதை வைத்து இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள காட்சிகள் அனைத்தும் உண்மையானவையே என்றார்.

தனி விசாரணைக்கு பரிசீலனை- பான் கி மூன்...

ஆல்ஸ்டனின் அதிர வைக்கும் அறிக்கை குறித்து பான் கி மூன் லேசாக அசைந்து கொடுத்துள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்து தான் பரிசீலித்து வருவதாக அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளாராம்.

இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி கூறுகையில், நிச்சயம் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன்.

சுயேச்சையான, சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மைகளை நாம் கண்டறிய முடியும். மனித உரிமை மீறல்கள், சர்வதே சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நிச்சயம் தண்டிக்க வேண்டும்.

தற்போது இந்த வீடியோ உண்மை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டியது அவசியம்.

கடந்த மே மாதம் பான் கி மூன் இலங்கை சென்றபோது ஐ.நா.வுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடுகள் அமல்பபடுத்தப்படுகிறதா என்பதை அறிவதற்காக தொடர்ந்து இலங்கை அரசுடன் ஐ.நா. தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருகிறது.

தற்போது ஆல்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவது குறித்து தான் பரிசீலித்து வருவதாக பான் கி மூன் இலங்கை அரசுக்குத் தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் அடங்கிய ஒரு கமிஷனை அமைத்து, அதைக் கொண்டு இந்த விவகாரம் குறித்து விசாரிப்பது குறித்து தான் பரிசீலித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் ஒத்துழைப்பையும் பெற விரும்புவதாகவும், அதுதொடர்பாக இலங்கைக்கு உதவ விரும்புவதாகவும் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல் நடந்துள்ளதா, அதில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டனரா என்பதை அறிய இலங்கைக்கு உதவ ஐ.நா. தயாராக இருப்பதாகவும் மூன் தெரிவித்துள்ளார்.

அன்றே சொன்னார் நவி பிள்ளை..

கடந்த ஆண்டு மே மாதமே ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை அளித்த ஒரு பேட்டியில், போரின் கடைசிக் கட்டத்தின்போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு மற்றும் ராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நவி பிள்ளை மீது இலங்கை அரசு பாய்ந்தது. இந்தியாவும் இலங்கைக்கு சாதகமாகவே பேசிக் கொண்டிருந்தது.

மனித உரிமைக் கவுன்சிலில் இருந்த பல நாடுகளும் கூட இலங்கைக்கு சாதகமாகவே செயல்பட்டன. யாரும் நவி பிள்ளையின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. சபையும் கூட இதை பெரிதுபடுத்தாமல் அப்படியே அமுக்கி விட்டது.

மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைக் கூட இந்தியாவின் உதவியுடன் தோற்கடித்து விட்டது இலங்கை.

இந்த நிலையில் தற்போது சேனல் 4 டிவி வெளியிட்ட வீடியோ உண்மையானதே என்று தெரிய வந்துள்ளதால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேசமயம், ஐ.நா. சபையும் போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

விசாரணைக்கு தான் பரிசீலித்து வருவதாக பான் கி மூன் கூறியிருந்தாலும் கூட அதை நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுதான் விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால்தான் உண்மை வெளி வரும். சுதந்திரமான விசாரணையாக, சர்வதசே அளவிலான விசாரணையாக அது அமைய வேண்டும்.

மேலும், சர்வதேச விசாரணையாளள் போர் பாதித்த பகுதிகளுக்குச் செல்லவும், போரை சந்தித்த மக்களிடம் பேசி உண்மை நிலவரங்களை சேகரிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். அப்படி நடந்தால்தான் உண்மை வெளி வரும்.

அதற்கு மாறாக, இலங்கையே விட்டே இந்த விசாரணையை நடத்த ஐ.நா. முயலுமானால், அது எப்படிப்பட்ட முடிவைத் தரும் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.

ஆல்ஸ்டன் கடிதத்திற்கு இலங்கை திமிர் பதில்..

இதற்கிடையே, விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான நடேசன் கொலை பற்றி எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா கூறியிருந்த கருத்துகளுக்கு விளக்கம் அளிக்குமாறு கோரி இலங்கை அரசுக்கு ஆல்ஸ்டன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் குறித்து உடனடியாக பதில் அனுப்ப முடியாது. இதைப் பரிசீலிக்க ஒரு கமிட்டி போட்டுள்ளோம். அது கடிதத்தை பரிசீலித்துச் சொன்ன பிறகுதான் பதில் தருவோம் என்று திமிராக கூறியுள்ளது இலங்கை.

இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறுகையில்,

பிலிப் அல்ஸ்டனின் கடிதத்துக்குப் பதில் அளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சிறப்புக் குழுவொன்றை நியமித்திருப்பதாகவும், கடிதத்தின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து வருவதாகவும் ஆல்ஸ்டனுக்கு விளக்கியுள்ளோம்.

அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விஷயங்களை விசாரிப்பதற்குச் சிறப்புக் குழுவொன்றை இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது என்பதையும் அவருக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

பொன்சேகாவின் அறிக்கை இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.

எனவே சிறப்பு அறிக்கையாளர் ஆல்ஸ்டனின் கடிதத்தில் உள்ள விஷயங்களுக்குப் பதிலளிக்க அதிகாரிகளுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது.

இந்தக் கடிதம் இலங்கை அரசுக்கும், மக்களுக்கும், அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட சில படை அதிகாரிகளுக்கும் அதிகளவிலான மறைமுகத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விவகாரங்கள் சிலவற்றுக்கு உடனடியாக எம்மால் பதிலளிக்க முடியாது. எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக முன்வைத்துள்ளோம்.

ஆவணத்தை எமது குழு ஆய்வு செய்த பின்னர் வெளிவிவகார அமைச்சகம் தகுந்த பதிலை அனுப்பி வைக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+