தன்மானம், தமிழ் மானம் போற்றி; ஆடிப் பாடி பொங்கல் கொண்டாடுவோம் - கருணாநிதி
சென்னை: பொங்கல் திருநாளை வாழை, பலா, மா என்ற முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை வரிசையான விளக்குகளால் ஒளி உமிழ் இல்லங்களில் புது எழிலைக் காட்டி; புத்தாடைகள் புனைந்து - தன்மானம், தமிழ் மானம் போற்றி; ஆடியும் பாடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும் - தரணி போற்றிடும் தமிழ்ப் புத்தாண்டு இதுவெனக் கொண்டாடிட வேண்டுகின்றேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு...
தமிழ்ப் புத்தாண்டு இன்னும் சில நாட்களில்! அதனை சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவதற்கான பணிகளில் நீ ஈடுபட்டிருப்பாய் என்பதை நான் நன்கறிவேன்.
பெரும் புலவரும், தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்களும் புலவர்களும் 1921-ம் ஆண்டு, சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி - தமிழர்களுக்கென்று ஒரு "தனி ஆண்டு'' தேவை என்பதை எடுத்தியம்பி - திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினை பின்பற்றுவதென்றும் - அதையே "தமிழ் ஆண்டு'' என்று போற்றுவதென்றும் - திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.
அந்த முடிவினையேற்று 39 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1971-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்புகளிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட வழிவகை செய்தேன்.
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது - எல்லாத் தமிழறிஞர்களாலும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையென்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து, அதனை ஆண்டுதோறும் கொண்டாடிட தமிழக அரசு 2008-ம் ஆண்டு முடிவு செய்து, அதனை அந்த ஆண்டு ஆளுநர் உரையிலும் குறிப்பிட்டிருந்தது.
பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழர்கள் இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து அந்த நாளை இனிக்கும் நாளாகவும் ஏற்றமும் பெருமிதமும் தரும் இணையிலா நாளாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற வகையில் - வாழை, பலா, மா என்ற முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை வரிசையான விளக்குகளால் ஒளி உமிழ் இல்லங்களில் புது எழிலைக் காட்டி; புத்தாடைகள் புனைந்து - தன்மானம், தமிழ் மானம் போற்றி; ஆடியும் பாடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும் - தரணி போற்றிடும் தமிழ்ப் புத்தாண்டு இதுவெனக் கொண்டாடிட வேண்டுகின்றேன்.
சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பை நல்கி உலகுக்கு உதவியவர்களையும் எண்ணி - உழவர் பெருங்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்திடும் இனிய திருவிழா நாளாக அந்நாளைக் கருதிடுவோம்.
மங்கிக் கிடந்திடும் பழந்தமிழ் மரபுகள் பொங்கிப் பெருகி எங்கும் தழைத்திடல் வேண்டும்; செழித்திடல் வேண்டும் என்ற உணர்வோடு இந்த ஆண்டும் தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாளாகக் கொண்டாடிட வேண்டுமென்று புதுவெள்ளமெனப் பெருகி வரும் உணர்வுகளோடு வாழ்த்துகின்றேன்.
பிறக்கவுள்ள தமிழ்ப் புத்தாண்டில்தான் சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கப் போகின்ற புதிய சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு இன்னும் இரண்டு மாத காலங்களில் திறக்கப்படவுள்ளன. அதுபோலவே, சென்னையில் கட்டப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கான பணிகள் நிறைவுற்று திறக்கப்படவுள்ளது.
அதற்கும் மேலாக தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சரித்திர நிகழ்ச்சிக்குப் பிறகு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளில் உள்ள தமிழர்கள் எல்லாம் கூடிக் கொண்டாடவுள்ள ஐந்து நாள் மாநாடு கோவை மாநகரிலே நடைபெற இருக்கிறது! அந்த மாநாட்டிற்கான குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தத்தமது பணிகளைத் தொடங்கிவிட்டன.
கோவை மாநாட்டினையொட்டி அதன் நினைவாக சர்வதேசத் தரத்தி லான தாவரவியல் பூங்கா ஒன்றும் "செம்மொழிப் பூங்கா'' என்ற பெயரில் கோவையில் உருவாவதற்கேற்ற பணிகளும் தொடங்கப்பட்டு - அதுபற்றி நேற்றையதினம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் என்னைச் சந்தித்து விவாதித்துச் சென்றிருக்கிறார்.
புத்தாண்டு தொடக்க நாளை எவ்வாறெல்லாம் கொண்டாடப் போகிறோம் என்று அமைச்சர்களும், கழகத்தின் மூத்த முன்னோடிகளும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் இப்போதே என்னைச் சந்திக்கும்போது கூறி வருகின்றார்கள்.
தமிழர்கள் தங்கள் இல்லங்களை அலங்கரிப்பதைப் போல - அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், நெடுஞ்சாலையிலே உள்ள நீண்ட பாலங்கள் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் அனைத்துக் குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து சமத்துவப் பொங்கல் சமைத்து புத்தாண்டின் பெருமையை ஊரெங்கும் பறைசாட்டிட வேண்டும்.
புத்தாண்டு தொடக்க நாள் என்பது - தமிழகத்திலே உள்ள ஏழையெளிய மக்களுக்கு - தமிழர்களாக பிறந்த மக்களுக்கு - திராவிடச் சமுதாயத்தை தனது இனம் என தலைநிமிர்ந்து கூறுகின்ற மக்களுக்கு ஓர் இனிய திருவிழா நாளாகும். வேறு நாட்கள் எத்தனையோ வரலாம், போகலாம். ஆனால் தை முதல் நாள் தான், நமது புத்தாண்டு தொடக்க நாள்.
இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை நீ கொண்டாடவிருக்கும் நேரத்தில் நமது அரசின் சார்பில் ஆளுநர் உரை அவையிலே படிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட கொள்கை அறிவிப்புகள்தான் அதிலே அடங்கியுள்ளன
அவற்றைத் தயாரிக்கும் பணியிலே அரசு நிதித் துறை செயலாளரோடு இணைந்து கடந்த சில வாரங்களாக அல்லும்பகலும் அதே சிந்தனையோடு தமிழ்நாட்டு மக்களுக்காக என்னென்ன திட்டங்களை அரசின் சார்பில் அறிவிக்கலாம், எவ்வாறெல்லாம் அதனை நடைமுறைப்படுத்தலாம் என்று யோசித்து எடுக்கப்பட்ட அறிவிப்புகள்தான் அதிலே அடங்கியுள்ளன.
சுருக்கமாக ஒன்றிரண்டைச் சொல்ல வேண்டுமேயானால், கிராமப் பகுதிகளில் குடிசைகளே இல்லாத ஒரு நிலையை உருவாக்கும் வகையில் 21 லட்சம் குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாநில அரசு செலவில் கட்டித்தரும் மாபெரும் "கலைஞர் வீட்டு வசதித் திட்டம்'';
ஒரு குடும்பத்தில் இதுவரை பட்டதாரிகளே இல்லாதிருப்பார்களானால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தொழிற்கல்வி பயில சாதிப் பாகுபாடின்றி, வருமான வரம்பை கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்; வீட்டுமனைப் பட்டா வழங்க குறைந்தபட்சக் குடியிருப்பு காலவரம்பு மூன்றாண்டுகளாகக் குறைப்பு;
நெல்லுக்கு கூடுதலாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 50 ஊக்கத் தொகை வழங்க முடிவு; 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மருத்துவ கல்லூரிக்கான கட்டிடம்;
கலையுலகினரின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவரும் திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ள 90 ஏக்கர் நிலம்; ஆதிதிராவிட மக்களின் "தாட்கோ'' கடன் ரத்து; சுனாமிக் கடன் பெற்ற விசைப்படகு மீனவர்களின் கடன் ரத்து; சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தி மேம்பாட்டு நிதி; என்று எழுதிக் கொண்டே போகலாம்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை தவிர இந்த அரசினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
பொதுவாக இந்த அரசைப் பொறுத்தவரையில் - குறிப்பாக என்னைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு அரசினால் எந்த வகையில் எல்லாம் உதவி செய்திட முடியும், நன்மைகளை நிறைவேற்றிட முடியும், சலுகைகளை வழங்கிட முடியும் என்பதிலே தான் என்னுடைய எண்ணத்தைச் செலவிட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றேன். அதன் விளைவாகத்தான் ஆளுநர் உரையிலே அடுக்கடுக்கான இந்தத் திட்டங்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசின் சார்பில் இந்தத் திட்டங்களுக்கான நிதிகள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற நிதிகள் முறையாகவும் முழுமையாகவும் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய பெரு விருப்பம்.
அதற்குத் தேவையான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பினரும் வழங்கிட வேண்டுமென்று புத்தாண்டினைச் சிறப்புற நீங்கள் எல்லாம் என்னோடு இணைந்து கொண்டாடவிருக்கும் இந்த நல்ல நேரத்தில் கேட்டுக் கொள்வதைத்தான் கடமையெனக் கருதுவதோடு எந்த வகையிலேனும் தமிழ் மக்களுக்காக உழைக்கின்ற என் கடமை உணர்வு என்றும் தொடருமென்ற உறுதியுடன் உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை குவிக்கின்றேன் என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications