நகைக் கடை அதிபர் மகள் 'கடத்தல்'-நாடகமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சென்னையைச் சேர்ந்த நகைக்கடை அதிபரின் மகளை போலீஸார் திண்டுக்கலில் வைத்து மீட்டனர்.

சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்த பவர்லால் என்ற நகைக்கடை அதிபரின் மகன் சுஜாஜ் நேற்று முன்தினம் இரவு சென்னை கொத்தவால் சாவடி போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், எனது தங்கை சோனல் பி.காம். படித்துள்ளார். எனது பெற்றோரின் திருமண நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட தீர்மானித்திருந்தோம். இதற்காக எனது தங்கை சென்டிரல் பகுதியில் உள்ள பேக்கரியில் கேக் வாங்க சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் தற்போது எஸ்.எம்.எஸ்.மூலம் ஒரு தகவல் அனுப்பி உள்ளார். அதில், அவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் மர்ம ஆசாமி ஒருவன் மயக்க மருந்து கொடுத்து கடத்தி செல்வதாகவும், ரயிலில் பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரயில் எங்கு செல்கிறது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனது தங்கைய மீட்டுத் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து விரைவான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களின் விசாரணையில் சோனல் கடத்திச் செல்லப்பட்ட ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற சிறப்பு ரயில் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அந்த ரயில் நிற்கும் ஊர்களை உஷார்படுத்தினர். அதன் படி ரயில் ரயில் திண்டுக்கல் வந்தபோது சோனல் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,

சோனல் கடத்தப்பட்டதாக புகார் வந்த போது பல்வேறு கேள்விகள் போலீஸ் முன்பு எழுந்தது. சோனல் எத்தனை மணிக்கு, எந்த ரயிலில் கடத்தப்பட்டார் என்பது முதலில் தெரியவில்லை. சோனல் 5 மணி அளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கேக் வாங்க வந்துள்ளார்.

அப்போது சென்டிரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்தோம். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் மாலை 5 மணி அளவில் சோனல் அவசரமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதை வைத்து அந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எந்த ரயில் புறப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

அந்த சமயத்தில் சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது தெரிய வந்தது. அந்த ரயில் ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்லக்கூடியது. உடனடியாக அந்த வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும், அங்குள்ள போலீசாருக்கும் இதுபற்றி தகவல் கொடுத்தோம்.

முதலில் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது போலீசார் தேடி பார்த்துவிட்டு, நாங்கள் சொன்ன அடையாளம் உள்ள பெண் யாரும் இல்லை என்று கூறி விட்டனர்.

அடுத்து கரூர் ரயில் நிலைய போலீசாரும் தேடிப்பார்த்து விட்டு, அது போன்ற பெண் இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். எங்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

இந்த நேரத்தில் இளம்பெண் சோனல் மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் அனுப்பினார். அதில் போலீசார் வந்து தேடி பார்த்ததாகவும், அப்போது கடத்தல்காரன் இருந்ததால் தன்னால் ஒன்றும் பேச முடியவில்லை என்றும் தகவலில் தெரிவித்தார்.

தற்போது தன்னை கடத்தல்காரன் பொது ரயில் பெட்டிக்கு மாற்றி மிரட்டி வைத்துள்ளான் என்றும் தெரிவித்தார். மேலும் ரயில் கொட்டாம்பட்டி என்ற இடத்தில் செல்வதாகவும் எஸ்.எம்.எஸ். தகவலில் சொல்லி இருந்தார்.

அதை வைத்து நாங்கள் உஷாராகி எப்படியாவது திண்டுக்கல்லில் வைத்து அந்த பெண்ணை மீட்க அங்குள்ள போலீசாரை உஷார்படுத்தினோம். ரயில் அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றது. போலீசார் ஒவ்வொரு பெட்டியாக தேடினார்கள்.

இருப்பினும் சோனலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே சோனலின் செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் பயணம் செய்த சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்த ஒரு பெண்ணின் செல்போன் ஒலித்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சோனல்தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

ஆங்கிலம், குஜராத்தி மொழியில் சோனல் போலீசாரிடம் பேசினார். இதைத்தொடர்ந்து போலீஸ் படை சூழ, ரயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை அழைத்துவர சென்னையிலிருந்து அவரது அண்ணனும், போலீசாரும் திண்டுக்கல் விரைந்தனர்.

புகார் கொடுத்த 6 மணி நேரத்துக்குள் சோனலை பத்திரமாக மீட்டு விட்டோம் என்றார்.

ஆனால் சோனல் குறித்து போலீஸாருக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. சென்னைக்கு அவரை அழைத்து வந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. அப்போதுதான் அந்த சந்தேகங்கள் நீங்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அவர் காதலனோடு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் குழப்பமாகி வீடு திரும்ப நினைத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஒரு கடத்தல்காரன், கடத்திச் செல்லும் பெண்ணை இப்படி சுதந்திரமாக அமர வைத்துச் செல்வானா அல்லது அந்தப் பெண்ணின் செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்த அனுமதித்திருப்பானா என்ற பலத்த சந்தேகங்கள் போலீஸாருக்கு எழுந்துள்ளன.

அடுத்த மாதத்தில், சோனலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. எனவே திருமணம் பிடிக்காததால், அவர் வீட்டை விட்டு வெளியேறினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+