ஆண்டிப்பட்டி அருகே சரணாலயம்-ஜெயலலிதா எதிர்ப்பு

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
வனச் சரணாலயம் என்ற போர்வையில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதி, கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்டதும் மக்குண்டு, மேகமலை, முருக்கோடை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 75 மலைக் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய விவசாய மக்களின் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் தற்போது தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.
இந்த பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு அண்ணா காலத்தில் நிலப்பட்டா வழங்கப்பட்டதாகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அங்கு விவசாயம் செய்து வருவதாகவும், வனச் சரணாலயம் அமைப்பதற்காக மேற்படி பகுதிகள் தற்போது வனத்துறையினரால் காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, காவல் துறையினரின் உதவியுடன் வனத் துறையினர் மேற்படி பகுதிகளுக்கு நுழைந்து அங்குள்ள பயிர்களை அழித்துள்ளதாகவும், மின் மோட்டார் பம்பு செட்டுகளை சேதப்படுத்தி உள்ளதாகவும், கிராமங்களை விட்டு வெளியேறுமாறு அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களை மிரட்டுவதாகவும், வெளியேறாவிட்டால் வன விலங்குகளை வீடுகளுக்குள் விட்டு விடுவோம் என்று மிரட்டுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
மூன்று தலை முறைகளாக வாழ்ந்து வரும் ஏழை, எளிய கிராம மக்களின் வாழ்வாதா ரத்தை அழித்து வனச்சரணாலயம் அமைப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ் நாட்டில் மக்களாட்சி நடைபெறவில்லை; காட்டாட்சி தர்பார் தான் நடைபெறுகிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் தேவையில்லை.
வனத்துறை மற்றும் காவல் துறையினரின் அத்துமீறல்கள் குறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட மாவட்ட உயர் அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாகத்தெரிய வில்லை.
எனவே, வனச் சரணாலயம் என்ற போர்வையில், ஏழை, எளிய மக்களின் நிலங்களை வனத்துறை மற்றும் காவல் துறையினரின் மூலம் பறிக்க நினைக்கும் தி.மு.க. அரசைக்கண்டித்தும், வனச்சரணாலயம் அமைக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 24-ந்தேதி காலை 10 மணி அளவில், தேனி மாவட்டம், வருசநாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications