தமிழகத்தில் 3 பாக். தீவிரவாதிகள் ஊடுறுவல்- தேடும் போலீஸ்

தமிழகத்திற்கு குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டி.ஜி.பி. லத்திகா சரண் உத்தரவின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தவிர பிற முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் போலீஸார் விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் 8 பாக். தீவிரவாதிகளால் ஆபத்து நேரக் கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது.
இந்த நிலையில், சென்னை உள்பட அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும், 3 தீவிரவாதிகளின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினந்தோறும் தொடர் வாகன சோதனை நடத்தி 3 பேரும் தமிழகத்தில் ஊடுருவி உள்ளார்களா? என்று சோதித்து வருகின்றனர்.
இதுகுறித்து டிஜிபி லத்திகா சரண் கூறுகையில்,
குடியரசு தினவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசாருக்கு விரிவாக அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக தொடர் வாகன சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்புக்கு என்று தனி த்திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. நிறைய தகவல்கள் கொடுத்துள்ளோம். தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் இருந்து தப்பிய தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவினால் பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தப்பிய தீவிரவாதிகள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து போலீசாரும் பாதுகாப்புக்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications
