சென்னை-பள்ளி பஸ் கதவு மோதியதில் சிறுமி சாவு
சென்னை: சென்னையில் பள்ளிப் பேருந்தின் கதவு வேகமாக மோதியதில் ஐந்து வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
சென்னை ஆலந்தூர் செளரி தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மகள் எஸ்.ஏ.ஆஃப்ரின் (5). ஆதம்பாக்கம், மகாலட்சுமி நகரில் உள்ள யுனிட்டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆஃப்ரின் யுகேஜி படித்து வந்தாள்.
பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலையில் 36 இருக்கைகள் கொண்ட பள்ளிக்கூட மினி பஸ்சில் பயணித்தாள். பல்வேறு இடங்களுக்கும் சென்று மாணவ, மாணவிகளை இறக்கி விட்ட அந்தப் பேருந்து கடைசியாக ஆலந்தூர் வந்து சேர்ந்தது.
அங்குள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் மற்றும் மதுக்கரை தெரு சந்திப்பில் ஆஃப்ரினை இறக்கி விட்டது. சாலையின் மறுபக்கம் அப்பாஸ் மகளுக்காக காத்திருந்தார்.
சிறுமி இறங்கியதும், கதவைக் கூட சரியாக பூட்டாத நிலையில் டிரைவர் வேகமாக பஸ்சைக் கிளப்பியுள்ளார். இதனால் பேருந்தின் கதவு படு வேகமாக பின்னோக்கி வந்து சாலையைக் கடக்கக் காத்திருந்த சிறுமி ஆஃப்ரின் மீது பலமாக மோதி விட்டது.
இதில் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி ஆஃப்ரின் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தாள்.
மகளுக்காகக் காத்திருந்த அப்பாஸ், இந்த கோர சம்பவத்தைப் பார்த்து அலறியபடி ஓடி வந்து மகளைத் தூக்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து கவனக்குறைவாகவும், வேகமாகம் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியதற்காக டிரைவர் ஹனீபாவை கைது செய்தனர்












Click it and Unblock the Notifications