புதிய தலைமை செயலகத்தில் கட்டட விபத்து- 3 பேர் சீரியஸ்
சென்னை: புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் சரிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டப்பேரவை வளாகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் கருணாநிதி கட்டுமானப் பணிகளை அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்.
2010-11-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய வளாகத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி மார்ச் 13ம் தேதி புதிய சட்டசபை வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கவுள்ளார். சோனியா காந்தியும் விழாவில் பங்கேற்பதாக வாக்களித்துள்ளார்.
இதையடுத்து கட்டுமானப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அவ்வப்போது கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு செல்கின்றனர். முதல்வர் கருணாநிதி இன்று கூட நேரில் சென்று பார்வையிட்டார். பல ஆலோசனைகளையும் கூறினார்.
இந்த நிலையில் இன்று கட்டுமானப்பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு விட்டது. இதில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
அனைவரும் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications