குடியரசு தின விழா- டெல்லியில் பல அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு
டெல்லி: குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வான் வழித் தாக்குதல்களை சமாளிக்கவும், முறியடிக்கவும் தரையிலிருந்து விண்ணில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்படவுள்ளன.
டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விரிவான போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத் முதல் செங்கோட்டை வரையிலான 8 கிலோமீட்டர் தூரத்திற்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நடமாடும் தாக்குதல் படையணிகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், தேசிய பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர டெல்லி போலீஸ் கமாண்டோக்களும், துணை ராணுவப் படையினரும் அணிவகுப்புப் பாதையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.
அதிக உயரமான கட்டடங்களிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்படுவர். இதுதவிர ராஜ்பாத் முதல் செங்கோட்டை வரையிலான பாதையில் 105 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகின்றன.












Click it and Unblock the Notifications