எஸ்.ஐ கொலை: மாஜி போலீஸ் அதிகாரி வாக்குமூலம்
நெல்லை: ஆழ்வார்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை அருகே ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேல் கடந்த 7ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியத்தை கொல்ல அவரது மனைவி சிவகாமி மற்றும் சகோதர்கள் திட்டமிட்டிருந்ததும், இதில் தவறுதலாக வெற்றிவேல் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இக்கொலை வழக்கில் சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி, ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக முன்னாள் எஸ்.ஐ சண்முகசுந்தரம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடையம் எஸ்.ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமியின் தந்தை ஆறுமுகம் எனது உறவினர். சிவகாமி- சிவசுப்பிரமணியன் திருமணத்தை நான் தான் முன்னின்று நடத்தி வைத்தேன்.
ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்தனர். நான் அவர்களை சாமாதனப்படுத்த முயன்றேன்.
ஆனால் எஸ்.ஐ சிவசுப்பிரமணியன் எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறி சிவகாமியை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
அதன்பிறகும் நான் அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினேன். என்ன வேண்டுமானாலும் வாங்கி தருகிறோம். சிவகாமியுடன் சேர்ந்து வாழுங்கள் என கூறினேன். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இதனால் அவர் மீது சிவகாமி கோர்டடில் வரதட்சனை வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் மீண்டும் கோர்ட் உத்தரவு மூலம் பணியில் சேர்ந்தார்.
அவர் வேறு திருமணத்திற்கும் ஏற்பாடு செய்வதாக தகவல் கிடைத்தது. இதையறிந்த சிவகாமி என்னிடம் கண்ணீர் விட்டு அழுதார். மேலும் அவரது சகோதரர்கலும் என்னை சந்தித்து இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும் என்று கூறினர்.
சிவகாமியுடன் வாழ மறுப்பவர் உயிருடன் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டினோம். இதற்கு ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த கள்ளபிரான் உதவி செய்தார்.
அதன்படி கடந்த 7ம் தேதி சிவகாமியின் சகோதரர்கள் கந்தசாமி, முருகன், கண்ணன் உள்ளிட்டோர் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் ஆழ்வார்குறிச்சியில் பதுங்கியிருந்தனர்.
ஆனால் ஆள்மாறாட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கொலை செய்துவிட்டனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
போலீசார் விசாணை நடத்தி கொலைக்கு சதி திட்டம் தீட்டியுள்ளதாக என்னை கைது செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications