போலீஸ் -வக்கீல் மோதல்: மேலும் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட சென்னை எழும்பூர் கோர்ட், இதுதொடர்பாக கூடுதல் ஆவணங்களைப் பரிசீலித்து இந்த வழக்கை மேலும் விரிவாக விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த வரலாறு காணாத கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. சமீபத்தில் இதுதொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
அதில் வக்கீல்கள், ஒரு சட்டக் கல்லூரி மாணவர், போலீஸார் மீது குற்றம் சாட்டிக் கூறப்பட்டிருந்தது. மேலும், உயர்நீதிமன்ற போலீஸ் நிலையத்தை எரித்த சம்பவத்தில் வக்கீல்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வக்கீல்கள் கோபமடைந்தனர். குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என்று தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்தின் சார்பிலும், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் சார்பிலும் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் விசாரணை நடத்தினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன், சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது திருப்பி அனுப்பப்படுமா? என்பது பற்றிய முடிவை நேற்று முன்தினம் மாலை அறிவித்தார்.
அவர் அளித்த உத்தரவில்,
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி சி.பி.ஐ. விசாரணை செய்து தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை இந்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பதிவு செய்கிறது.
இக்குற்றப்பத்திரிகையை எதிர்த்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஆய்வு செய்ததில் வக்கீல்களுக்கு வரும் 5-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கிறோம். அவர்கள் தங்கள் புகாரின் அடிப்படையில் போலீசாருக்கு எதிரான ஆவணங்கள், வீடியோ கிளிப்பிங்குகள் உள்ளிட்டவற்றை 5-ந் தேதிக்குள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.
சி.பி.ஐ. அதை பெற்றுக் கொண்டு மீண்டும் விசாரணை நடத்தி 22-ந் தேதிக்கு முன் கூடுதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications