காதல் தோல்வியால் விரக்தி - செல்போன் டவரிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
சங்கரன்கோவில்: காதலில் தோல்வி அடைந்ததாலும், காதலிக்கு வேறு இடத்தில் கல்யாணம் நிச்சயமாகி விட்டதாலும் விரக்தி அடைந்த வாலிபர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில் அம்பேத்கார் 1ம் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பன்னீர்செல்வம். சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பிபிஏ படித்து முடித்துள்ளார்.
அதே கல்லூரியில் படித்த பக்கத்து தெருவை சேர்ந்த சகமாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து அதற்கான நிச்சயதார்த்தத்தை நேற்று நடத்தினர்.
இதையறிந்து விரக்தியடைந்த பன்னீர்செல்வம் நேற்று அந்த மாணவியின் தெரு எதிரே அமைந்துள்ள 120 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவரில் ஏறினார்.
அதில் நின்று கொண்டு காதலியின் பெயரைச் சொல்லி, நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, முடிந்தால் அடுத்த பிறவியிலாவது இணைவோம் நீ சந்தோஷமாக இரு. நான் சாக போகிறேன் என்று கத்தினார்.
இவரது கூச்சல் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அவரை கீழே இறங்கி வர வற்புறுத்தினர். அவர் மறுக்கவே உடனடியாக சங்கரன்கோவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய வீரர்களின் வாகனம் தெருவுக்குள் நுழைவதை கண்ட பன்னீர் செல்வம் யாரும் எதிர்பாராத வகையில், டவரில் இருந்து குதித்து விட்டார். இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டவுன் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் திருமலை குமார் மற்றும் போலீசார் வந்து உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications