2வது முறையாக அதிபர் தேர்தலுக்கோ, வெளியுறவு அமைச்சர் பதவிக்கோ வர விரும்பவில்லை- ஹில்லாரி

பிபிஎஸ் டிவிக்கு அவர் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டி:
இப்போதைய பதவிக்காலத்திற்கு மட்டுமே நான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பேன். மீண்டும் ஒபாமா அதிபரானால் கூட, நான் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக விரும்பவில்லை. முழுமையான எட்டு ஆண்டுகளுக்கு நான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்க விரும்பவில்லை.
இது மிகவும் சவாலான பணி. இருப்பினும் இதை நான் விருப்பமுடன் செய்து வருகிறேன். அதிபரின் விருப்பத்திற்காக செய்து வருகிறேன். ஆனால் 24 மணி நேரமும் ஏதாவது ஒரு பிரச்சினை குறித்த சிந்தனையுடன் செயல்பட வேண்டிய பதவி இது. எனவே சரியான தருணத்தில் இன்னொருவரிடம் இதைக் கொடுத்து விட்டு ஓடி விடவே விரும்புகிறேன்.
ஓய்வுக்குப் பின்னர் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. எனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. படிக்க, எழுத, ஆசிரியையாக பணியாற்ற, சுற்றுப்பயணங்கள் செய்ய என்று பல வேலைகள் இருக்கின்றன.
பெண்கள், சிறுமிகள், குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசகராக செயல்படலாம்.
2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. நிச்சயம் நான் போட்டியிட மாட்டேன்.
எனது கணவர் பில் கிளிண்டன் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து. அதில் சந்தேகமே இல்லை. எனது பணிகளுக்கு அவர் பெரும் உதவியாக இருக்கிறார். எனக்குத் தெரியாத பலரையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. நான் போகாத இடங்களுக்கெல்லாம் அவர் போயிருக்கிறார். நாங்கள் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம், ஆலோசனைகளை மேற்கொள்வோம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவரிடம் ஆலோசனை கேட்க நான் தவறுவதில்லை.
இது இன்று நேற்றல்ல, அவர் அதிபராக இருந்தபோதும், பின்னர் நான் செனட்டராக இருந்தபோதும், தற்போது அமைச்சராக இருக்கிறபோதும் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. பில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆதரவு, நிச்சயமாக என்றார் ஹில்லாரி.
ஒபாமா பேச்சு-ஆர்வம் காட்டாத அமெரிக்கர்கள்:
இதற்கிடையே, நேற்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா பேசியதைக் கேட்க அமெரிக்கர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஒபாமாவின் பேச்சை அமெரிக்க டிவி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்தன. எதற்கெடுத்தாலும் சர்வே நடத்தும் அமெரிக்கர்கள் இதையும் விடவில்லை.
ஒபாமா பேச்சை எத்தனை பேர் கேட்டார்கள், பார்த்தார்கள் என்று நீல்சன் என்ற நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது.
அதில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பேச்சை 4 கோடியே 80 லட்சம் பேர் மட்டுமே கேட்டுள்ளனராம். இதுவே ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவரது முதல் பேச்சை 4 கோடி மக்களே கேட்டனர். ஆனால், ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரையை 6 கோடியே 20 லட்சம் பேர் கேட்டனர்.
அதிபராக பதவி ஏற்றவுடன் 1993-ம் ஆண்டு முதன் முதலாக பில் கிளிண்டன் ஆற்றிய உரையை 6 கோடியே 69 லட்சம் பேர் கேட்டனர். அதிபர் ஒபாமா பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேச்சை 5 கோடியே 23 லட்சம் பேர் கேட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமாவின் செயல்பாடுகள் அங்கு பெரும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தி வருவதே அவரதை பேச்சைக் கேட்போரின் எண்ணிக்கை குறைந்து போனதற்குக் காரணமாம்.
பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், அவற்றை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்கர்கள் கடும் எரிச்சலில் உள்ளனர். ஒபாமா சொல்வதைச் செய்யாமல் வெறும் பேச்சளவிலேயே இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுவதால்தான் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் தேய்ந்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications