சிகரெட் விளம்பரங்களை அகற்ற முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு சிகரெட் தொடர்பான இசை நிகழ்ச்சிகளை தடை செய்திருப்பதை வரவேற்கிறேன். எனினும் இதே இசை போட்டிக்காக சென்னை நகரின் பல கடைகளில் விளம்பரங்களும், முகப்பு தோரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவையும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்கள்தான்.
இவ்வாறு சிகரெட் விற்பனைக்காக விளம்பரம் வைப்பவர்களுக்கும், அதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்திய அரசின் புகையிலைத்தடை சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க முடியும்.
பல கடைகளில் பெரிய பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சிகரெட் வாங்கினால் கைப்பேசி, மெமரி ஸ்டிக், லைட்டர், சிகரெட் போன்றவை இலவச பரிசாக வழங்கப்படும் என்கிற விளம்பரங்களும் வைக்கப்பட்டுள்ளன. இலவச சிகரெட்டுகளும் கொடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாகவும் சிகரெட் நிறுவனங்கள் கூறுகின்றன.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கடைகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான விளம்பரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். சிகரெட்டுடன் இலவச பரிசுகள் அளிப்பதை தடுக்க வேண்டும். இலவசமாக சிகரெட் அளிப்பதையும் தடை செய்ய வேண்டும். இதன்மூலம் புகை பிடிப்பதால் ஏற்படும் கொடும் தீமைகளில் இருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கும் போக்கு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் புகை பிடிக்காத அப்பாவி மக்கள், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். இதனை தடுப்பதற்கான தடை உத்தரவு நடைமுறையில் இருந்தபோதிலும், அது முழுமையான அளவில் செயல்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
அனைத்து பொது இடங்களிலும், பணி இடங்களிலும புகைபிடிப்பதை தடைசெய்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதற்கு பொறுப்பானவர்களின் பெயரை அறிவிக்க வேண்டும். தீப்பெட்டி, லைட்டர் போன்ற புகை பிடிக்க உதவும் கருவிகளை பொது இடங்களில் வைத்திருக்கக்கூடாது. புகைபிடிப்பவர்களுக்கும், அதனை தடுக்க தவறுபவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்றெல்லாம் அரசாணை உள்ளது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே புகைபிடிக்காத மக்களின் உயிரையும், உரிமையையும் காப்பாற்றும் வகையில், தமிழ்நாடு அரசு 'பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும்' சட்டப்பிரிவினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என முதல்வரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அன்புமணி.












Click it and Unblock the Notifications