குடிகார பெண் ஓட்டி கார் போலீஸ் ஜீப்பில் மோதி ஒருவர் பலி
மும்பை: மும்பையில் குடித்து விட்டு கடும் போதையில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற பெண், போலீஸ் ஜீப் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
போலீஸ் ஜீப் மட்டுமல்லாமல் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் இந்தப் பெண் ஓட்டிச் சென்ற காரில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டன.
நேற்று இரவில் இந்த கோரச் சம்பவம் மும்பையில் நடந்தது. காயமடைந்தவர்களில் ஒருவர் இன்று காலை மரணமடைந்தார்.
நேற்று இரவு ஒரு பெண் நிறையக் குடித்து விட்டு போதையில் தனது ஹோண்டா காரை ஓட்டிச் சென்றார்.
அப்பெண்ணின் கட்டுப்பாட்டை விலகிய கார் தாறுமாறாக ஓடி ஒரு போலீஸ் ஜீப், ஒரு டாக்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், நான்கு போலீஸார், பைக்கில் சென்ற ஒரு நபர் ஆகியோர் காயமடைந்தனர்.
அனைவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 35 வயதான அப்சல் கனோஜியா என்பவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் உதவி ஆணையர் அனில் தகல்கர் கூறுகையில், ஓபரா ஹவுஸிலிருந்து சர்ச்கேட் நோக்கி ஒரு கருப்பு நிற ஹோண்டா கார் வேகமாகப் போனது. தாறுமாறாக சென்ற அந்தக் கார் பாலத்தின் கீழே இருந்த ஒரு டாக்சி மீது முதலில் மோதியது. பின்னர் அடுத்தடுத்து பிற வாகனங்கள் மீது மோதியது.
அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர் என்றார்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோரைப் பிடிப்பதற்காக நின்றிருந்த போலீஸார் வந்த ஜீப் மற்றும் போலீஸார் மீதுதான் அந்தப் பெண்ணின் கார் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் காரை ஓட்டி வந்த ஒருவரைக் கொன்ற பெண்ணின் பெயர் அல்விரா ஹவேலிவாலா என்று தெரிய வந்துள்ளது. அவரது வயது 27. அவரைக் கைது செய்த போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவர் நிறையக் குடித்திருந்தது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications