தமிழர் பாதுகாப்புக்கு சர்வதேச செயலகம்: கிருஷ்ணசாமி யோசனை
கோவை: உலக அளவில் தமிழர்களின் வாழ்வுரிமை, மண்ணுரிமை, மனிதஉரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட நிரந்தர உலகத்தமிழர் பாதுகாப்பு செயலகம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் புலவர் புலமைப்பித்தன், மலேசிய நாட்டின் பினாங்கு துணை முதல்வர், மலேசிய நாட்டு எம்.பி குணசேகரன், மலேசிய எம்.எல்.ஏ.க்கள் சிவநேசன், குணா, ரவி, சிம்மாதிரி, கணபதிராவ், வசந்தகுமார், தொழில் அதிபர் அருணாச்சலம், தமிழ் அறிஞர் பொன்னுரங்கம் உள்பட பலர் பேசினர்.
மாநாடு நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் தனி தமிழ் ஈழ நாடு அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை முள்வேலி சித்ரவதை முகாம்களில் உள்ள தமிழர்களை சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்காவிட்டால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சம் இளைஞர்களை திரட்டி இலங்கை நோக்கி செல்வோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மலேசியாவில் தமிழர்கள் இழிவுபடுத்தப்படுவதையும் மாநாடு கடுமையாக கண்டித்து.
மாநாட்டில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், 'இலங்கையின் வடகிழக்கு பூர்வீக தமிழ்குடி மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் 10 கோடிக்கும் மேலான தமிழர்கள் கேட்பாரற்று கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழின மக்களை இனிமேலும் பாதுகாப்பதற்கு தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ உலக அளவிலோ யாரையும் நம்பி எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை.
இதை கடந்த ஆண்டு ஈழ மக்கள் 1 லட்சம்பேர் கொல்லப்பட்டபோது, உலகம் மவுனம் சாதித்ததில் இருந்து புரிய முடிந்தது.
எனவே உலக அளவில் தமிழர்களின் வாழ்வுரிமை, மண்ணுரிமை, மனிதஉரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ் மக்களை பாதுகாத்திட நிரந்தர உலகத்தமிழர் பாதுகாப்பு செயலகம்' ஒன்றை அமைத்திட இந்த மாநாட்டின் மூலம் பிரகடனப்படுத்தப்படுகிறது.
தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவருடைய தயவும் இன்றி நம்முடைய பாதுகாப்பை முடிவு செய்ய நமக்குள் இருக்கின்ற அனைத்து விதமான வேறுபாடுகளையும், குறிப்பாக சாதி உணர்வுகள், மத உணர்வுகள், கட்சி உணர்வுகள் ஆகியவற்றை அடியோடு துறந்து தமிழர் என்ற ஒரே அடையாளமாக அனைவரும் இணைந்து செயல்பட இந்த மாநாட்டின் மூலமாக பிரகடனப்படுத்துகிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications