அமைச்சர் நெப்போலியன் நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி மோசடி - 3 பேர் கைது
சென்னை: பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பேரில் போலியான இணையதளம் உருவாக்கி, வேலை தேடும் இளைஞர்களிடம் பணம் சுருட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (26). நாமக்கல்லைச் சேர்ந்தவர் ராஜா. பொறியல் பட்டதாரிகளான இவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்த போது நண்பர்களானார்கள்.
மற்றொருவர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த ராஜூ.
இவர்கள் மூவரும் சேர்ந்து மோசடி திட்டத்தை தீட்டியுள்ளனர். ராஜூ மூலம் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனம் பற்றிய பல்வேறு தகவல்களை இரண்டு இன்ஜினியர்களும் திரட்டினர்.
குறிப்பாக வேலை கேட்டு விண்ணப்பித்த நபர்களின் விவரங்களை ராஜூ முலமாக பெற்றனர். அவர்களுக்கெல்லாம், தொலைபேசி வழி இன்டர்வியூவிற்கு குறிப்பிட்ட தேதியில் தயாராக இருக்கும்படி இருவரும் இமெயில் அனுப்பினர்.
பொறியியல் படித்தவர்கள் என்பதால் ஓரளவு சந்தேகம் எழாத வகையில் விண்ணப்பதாரர்களிடம் கேள்விகளை கேட்டு சமாளித்தனர். அத்துடன் பெண் குரலில் பேசும் தொலைபேசி தொழில்நுட்பத்தையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பேசிய அனைவரிடமும் தேர்வு முடிந்துவிட்டதாக கூறிய இரண்டு பொறியாளர்களும், குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.30 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
பின்னர், கேமரா இல்லாத ஏடிஎம் மையமாக பார்த்து இந்த பணத்தை எடுத்து விடுவார்கள். இவ்வாறாக சுமார் 2.5 லட்சத்தை இரண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றியுள்ளனர்.
இதற்கென போலியான முகவரியில் ஒரு வங்கிக் கணக்கையும் இருவரும் துவக்கியிருக்கின்றனர். அதேபோல மொபைல் போன், தொலைபேசி ஆகியவற்றையும் போலி ஆவணங்களின் மூலம் இல்லாத முகவரிகளுக்கு பெற்றுள்ளனர்.
இ-மெயில் அனுப்புவதற்காக ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பேரில் போலியாக ஒரு இணையதளத்தையும் இவர்கள் உருவாக்கினர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன், ராஜா மற்றும் ராஜூ ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த மூவரும் போலியாக பயன்படுத்திய ஜீவன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மத்திய அமைச்சர் நெப்போலியனுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications