உ.பியில் மத்திய அமைச்சர் எனக் கூறியவர் உள்பட 3 பேர் கைது
காஸியாபாத்: சிவப்பு சுழல் விளக்கு எரிய, பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி பறக்க, தடபுடலாக சென்ற ஒரு காரை மடக்கி நிறுத்திய போலீஸார் அதில் இருந்த போலி மத்திய அமைச்சரையும், அவருடன் வந்த இருவரையும் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.
போலி போலீஸ் அதிகாரிகள், போலி வக்கீல்கள், போலி ஐஏஎஸ் அதிகாரிகளைத்தான் இதுவரை போலீஸிடம் சிக்கிப் பார்த்திருக்கிறோம். ஆனால் உ.பியில் போலி மத்திய அமைச்சர் ஒருவர் சிக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸியாபாத் நகரில் போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவப்பு சுழல் விளக்கு எரியவிட்டபடி, பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி பறந்தபடி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.
வழக்கமாக ஏதாவது ஒரு பகுதியில் வி.ஐ.பிக்கள் போனால், அந்தப் பகுதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் அப்படி தகவல் ஏதும் வராத நிலையில் விஐபி கார் ஒன்று வருவதைப் பார்த்த போலீஸார் அந்தக் காரை மடக்கினர்.
அப்போது காரில் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருந்த ஒருவர் வெளியே வந்து, காரில் மத்திய அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரா என்று அதிர்ச்சி அடைந்த போலீஸார், மத்திய அமைச்சராக இருந்தால் நிச்சயம் தகவல் வந்திருக்குமே என்று சந்தேகமடைந்து காரைத் திறந்து பார்த்தபோது உள்ளே உட்கார்ந்திருந்தவர் ஒரு டுபாக்கூர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து மத்திய அமைச்சர் என்று சொல்லப்பட்ட டெல்லியைச் சேர்ந்த சுனில் குமார், அவருடைய நண்பரான ரவி என்றும் துப்பாக்கியுடன் பாதுகாப்பு அதிகாரி போல நடித்த நபர் ஆகிய மூவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications