அசோக் நகரில் நடந்த 3 கொலைகள்-போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் கெடு
சென்னை: சென்னை அசோக் நகரில் நடந்த 3 கொலை வழக்குகளில் நான்கு வாரத்திற்குள் துப்பு துலக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
சென்னை அசோக் நகரில் நடந்து வரும் தொடர் கொலைகளால் அப்பகுதியினர் பெரும் பதட்டத்துடன் உள்ளனர். எப்போது, எங்கு கொலை விழுமோ என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் கண்காணிப்பாளர் ராஜதேவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், நான் அசோக்நகரில் 2008ம் ஆண்டில் இருந்து வசிக்கிறேன். அந்த பகுதியில் நடக்கும் தொடர் கொலையால் மிகுந்த அச்சம் ஏற்பட்டு உள்ளது. அங்கு வசித்து வந்த தமிழக அரசின் முன்னாள் அதிகாரி, அவர் மனைவி மற்றும் அவர் வீட்டில் இருந்த வேலைக்கார இளம் பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
அனந்தலட்சுமி என்ற பெண் அவரது மகனுடன் கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்பு காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற கொலைளில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அசோக்நகர் போலீசார் திணறுகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காட்டும் அக்கறையை விட, முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலேயே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
எனவே சென்னையில் நடந்த கொலைகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.கே.சசீதரன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அசோக்நகரில் 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை 19 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் அரசு அதிகாரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தவிர மற்ற 18 வழக்குகளிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை இன்னும் 4 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
கண்டுபிடிக்க முடியாவிட்டால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்துவிடுவதற்கு தமிழக அரசுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் கடிதம் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications