அடகு கடையில் ரூ.1.75 கோடி நகைகள் கொள்ளை
சென்னை: பூட்டியிருந்த நகைக்கடையில் சுவரை ஓட்டை போட்டு, சுமார் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, கரையான்சாவடியில் பர்ஷன்சந்த் (48) என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் அடகுக்கடை உள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக அவரும், அவரது மகன்கள் தினேஷ்குமார் (27), விகேஷ்குமார் (24) ஆகியோர் நகைக்கடையை கவனித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நேற்று காலை தினேஷ்குமார் வந்து கடையை திறந்தார். அப்போது கடைக்குள் இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து தினேஷ் குமார் அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் பின்புற சுவரில் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போட்டு, அதன் வழியே கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.
இதுகுறி்த்து உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. நகைக்கடையின் பீரோவில் இருந்த 8 கிலோ தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் அடகு பிடிக்கப்பட்ட நகைகள் அனைத்தையும் கொள்ளையர்கள் திருடிச்சென்று விட்டதாக, கடை உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.1.75 கோடியை எட்டும் என கணிக்கப்படுகிறது.
போலீசார் கடைக்குள் சென்று பார்த்த போது, கடையில் இருந்த கேமரா, அலாரம், டெலிபோன் இணைப்பு, பணம் எண்ணும் எந்திரத்தின் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவற்றை திட்டமிட்டு கொள்ளையர்கள் துண்டித்து இருக்கிறார்கள்.
சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வந்தது. அது, நகைக்கடையின் உள்ளே மோப்பம் பிடித்து விட்டு, குமணன் சாவடி வரை ஓடியது. அதன்பின் அங்கேயே நின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications