உறுதிமொழியை மீறியது சிவசேனா - ஷாருக் கான் பட தியேட்டர்கள் மீது தாக்குதல்
மும்பை: ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் பட வெளியீட்டை தடுக்க மாட்டோம் என்று கூறியிருந்த சிவசேனா தற்போது அதை மீறி விட்டது. அப்படம் திரையிடப்படவுள்ள 2 தியேட்டர்கள் மீது இன்று சிவசேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முலுந்த் பகுதியில் உள்ள மெஹல் தியேட்டருக்குள் புகுந்த சிவசேனா அமைப்பினர் அங்குள்ள புக்கிங் கவுண்டர் ஜன்னல்களை அடித்து உடைத்தனர்.
இதேபோல இன்னொரு பிரிவினர் கட்கோபரில் உள்ள ஷ்ரேயாஸ் தியேட்டரில் புகுந்து தாக்கினர்.
இதேபோல பந்த்ரா, கர், கஞ்சும்மார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சிவசேனாவினர் ஷாருக் கான் படத்தை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
முலுந்த் சம்பவத்தில் 12 பேரும், கட்கோபரில் 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பட இயக்குநர் கரண் ஜோஹர், மும்பை போலீஸ் கமிஷனர் சிவானந்தனை சந்தித்து படம் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கமிஷனர் அவருக்கு உறுதியளித்தார்.
ஷாருக் கான் படத்தை தடுக்க மாட்டோம் என்று பால் தாக்கரே உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் இன்று சிவசேனாவினர் திடீரென தாக்குதலில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications