விலைவாசி உயர்வைக் கண்டித்து சேலத்தில் விஜயகாந்த் தலைமையில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை: விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற 19ம் தேதி கட்சி நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பண்டங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் குடும்பச் செலவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
அரிசி கிலோ ரூ.40, துவரம்பருப்பு கிலோ ரூ.80, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணை லிட்டர் ரூ.55, சர்க்கரை கிலோ ரூ.42 என்று உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலையும் கூடியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பிரதமர் 6.2.2010 அன்று டெல்லியில் கூட்டிய முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் ஏதாவது நிவாரணம் கிடைக்காதா என்று ஆவலோடு பாமர மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பருப்பு வகைகள் பற்றாக்குறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இருந்தும் அதன் உற்பத்தியை அதிகரிக்கவோ அயல்நாடுகளிலிருந்து உரிய நேரத்தில் இறக்குமதி செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய அரசு பற்றாக்குறையை வளரவிட்டது ஏன்?
தேர்தலின்போது, கிலோ அரிசி ரூ.3-க்கு என்ற விலையில், 20 கிலோ அரிசி தரப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து வெற்றி பெற்றது. ஏன் அதை செயல்படுத்தக்கூடாது என்று கேட்டால், மத்திய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி, அதனை அரசியல் ஆக்காதீர்கள் என்கிறார். அரிசியிருந்தால் தானே தருவதற்கு என்று பிரதமர் கூறியுள்ளார்.
சர்க்கரை ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் வகை செய்து பணக்காரர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது தான் சர்க்கரை விலை உயர்வுக்குக் காரணம்.
அவ்வப்பொழுது பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தி வருகிறது. இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவிட்டு விலைவாசி உயர்வுக்கு தாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பில்லை யென்று மத்திய அரசு கபட நாடகம் நடத்துவதா?
இன்னும் என்ன வேடிக்கையென்றால் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகள் தான் பொறுப்பு என்று மத்திய அரசு சொல்கிறது. மாநில அரசுகள், குறிப்பாக எதிர்க்கட்சியினர் ஆட்சியில் உள்ள மாநில அரசுகள் மத்திய அரசின் பொருளாதாரக்கொள்கையும், நடவடிக்கைகளும் தான் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்கின்றனர்.
மாநில அரசுகளும் விலைவாசி உயர்வில் தங்கள் பங்கிற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்துள்ளனர்.
விலைவாசியேற்றத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, எனது தலைமையில் 19.2.2010 வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணியளவில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications