ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்
டெல்லி: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணைய விழாவில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் சில நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இந்த சந்திப்பை மையப்படுத்தி பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அத்துடன் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு இதுதொடர்பாக பேட்டியளித்த ஜெயலலிதா, 'தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார்' என்பதை சூசகமாக தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் அடுத்துவரும் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், 'தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக உறவு ஆரோக்கியமானதாகவும், சுமுகமாகவும் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கமாக திமுக விளங்குகிறது. எங்கள் இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவொரு முரண்பாடுகளும், பிரச்னைகளும் இல்லை. எனவே இப்போதுள்ள கூட்டணியே தொடர்ந்து நீடிக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications