நிதிச் சலுகைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டும்!-சி ரங்கராஜன்

இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பொருளாதாரத் தேக்க நிலை இன்னும் பல நாடுகளிலும் தொடர்கிறது. தொழில் நிறுவனங்கள் சரிவிலிருந்து மீள பல சலுகைகளை அரசுகள் அளித்துள்ளன. இந்தியாவிலும் மத்திய அரசு பல நிதிச் சலுகைகளை அளித்துள்ளது.
இதனால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ரூ. 1.86 லட்சம் கோடியாக உயர்ந்தது. மேலும் நிதிப் பற்றாக்குறை அளவு 6.2 சதவிகிதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை மீண்டும் 6.2 சதவீதமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே வரிச் சலுகைகளை படிப்படியாகத் திரும்பப் பெறுவது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. வரிச் சலுகையால் இந்திய நிறுவனங்கள் சரிவிலிருந்து மீண்டாலும், வரிச் சலுகைகள் இன்னும் தொடர வேண்டும் என அடம்பிடிக்கின்றன.
இந்நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரிச் சலுகைகளைத் திரும்பப் பெறலாம் என மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். இவரது கருத்தை தற்போது பிரதிபலிக்கும் வகையில் ரங்கராஜனும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மத்திய புள்ளியியல் மையம் (சிஎஸ்ஓ) குறிப்பிட்டபடி நடப்பு நிதி ஆண்டில் பருவமழை நன்கு இருக்கும் என்றும், வேளாண் உற்பத்தி குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது. வேளாண் உற்பத்தியில் 0.2 சதவீதம் மட்டுமே மாற்றம் இருக்கும் என்றும் கணித்துள்ளது. எனவே வரிச் சலுகைகளை படிப்படியாக திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பை வெளியிட இதுவே சரியான தருணம் என்று ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "வரிச் சலுகைகள் எந்தெந்த காலகட்டத்தில் எப்படி திரும்பப்பெறப்படும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும். அதன்படி அதை செயல்படுத்துவதன் மூலம்தான் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும்.
வரிச் சலுகையை ஒரேயடியாக திரும்பப் பெறாமல் படிப்படியாக திரும்பப் பெற வேண்டும். பல்வேறு வரிகளைத் தவிர்த்து ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்" என்றார்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரித்திருப்பதால் வரிச் சலுகைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications