'அடுத்து, மை நேம் இஸ் கசாப் படம் எடுப்பார்கள்'!
மும்பை: அடுத்து மை நேம் இஸ் கசாப் என்ற பெயரில் படம் எடுத்து பாகிஸ்தானுக்கு கொடுக்கலாம். மகாராஷ்டிர முதல்வர் அதையும் செய்வார் என்று நம்புவோம் என்று கூறியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
இதுகுறித்து சாம்னாவில் அவர் எழுதியுள்ளதாவது:
மை நேம் இஸ்கான் படம் தொடர்பாக ஷாருக்கான் என்னுடன் சந்தித்து பேசுவதாக இருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதுமே பிரச்சினை தீர்ந்து இருக்கும். ஆனால் மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனா தொண்டர்களை ஆத்திரம் அடைய செய்ய வைக்கும் வகையில் நடந்து கொண்டது.
ஷாருக்கான் தற்போது அபுதாபி சென்று இருக்கிறார். அவர் திரும்பி வந்ததும் சந்திப்பு நடைபெறும். அவரது படம் எந்த பாதிப்பும் இல்லாமல் ரிலீஸ் ஆகும்.
முதல்வர் அசோக் சவான் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவர் படத்தின் பெயரை மை நேம் இஸ் அசோக்கான் என்று மாற்றி கொள்ளலாம். அவரும் ஒரு பாகிஸ்தான் அபிமானிதான்.
அடுத்து மை நேம் இஸ் கசாப் என்ற பெயரில் படம் எடுத்து பாகிஸ்தானுக்கு கொடுக்கலாம். நீங்கள் அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
சவானுக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடல் வழியாக பத்து தீவிரவாதிகளை அனுப்பி மும்பையை பாகிஸ்தான் தாக்கச் சொன்னதோ என்று தோன்றுகிறது.
தற்போது தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாகிஸ்தானை விரும்பும் 'கான்'களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார் சவான்.
இப்படியே போனால் விரைவில் பாகிஸ்தானின் தேசிய ஹீரோவாகி விடுவார் சவான்.
ரொம்ப நல்லாருக்கு சவான், நீங்கள் ஆட்சி செய்யும் லட்சணம். நீங்கள் பெஷாவருக்கோ அல்லது பலுசிஸ்தானுக்கோ முதல்வராக இருக்க ரொம்பத் தகுதியானவர்.
பாகிஸ்தானில் அரசியல் எதிரிகளை ஒடுக்க ராணுவத்தை ஏவுவார்கள் அல்லது சிறையில் தூக்கிப் போடுவார்கள். மகாராஷ்டிராவிலும் போலீஸ் ராஜ்ஜியத்தை ஏவியுள்ளார் சவான். கசாப் பெயரில் சிவசேனாவை நசுக்க அவர் உறுதி பூண்டுள்ளார்.
ஆனால் மும்பையில் பாகிஸ்தான் கொடியைப் பறக்க விடத் துடிக்கும் சவானை நாங்கள் சும்மா விட மாட்டோம். அவரை எதிர்க்கும் தைரியம் சிவசேனாவுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.












Click it and Unblock the Notifications