பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் நாடு திரும்பலாம்: சிதம்பரம்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப வரலாம் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் வாழும் அப்பாவி இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக இருந்து வருகிறது.
ஆனால், எல்லை தாண்டிச் சென்றவர்களை இந்தியாவுக்குள் மீண்டும் அனுமதிக்கக்கூடாது என காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தீவிரவாதிகளின் வசமிருந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் இளைஞர்கள் தீவிரவாத பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை என்றும், இந்த நடவடிக்கையின் மூலம் ஊடுருவல் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது.
இருநாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தீவிரவாத ஊடுருவல் இல்லாமல் அப்பாவி இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுப்பது குறித்து பேசினார்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுகுறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'உமர் அப்துல்லா தெரிவித்துள்ள ஆலோசனையை மத்திய அரசு ஏற்கிறது. ஆனால் அவர்கள் வன்முறையை கைவிட்டுவிட்டு வரவேண்டும்.
இதுதொடர்பாக காஷ்மீர் முதல்வர் கூறிய ஆலோசனையை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு குழுவை நியமித்துள்ளார். இந்த குழு அளித்த பரிந்துரையில் இந்த ஆலோசனையும் உள்ளது.
இந்தியாவுக்கு திரும்ப விரும்புவோரை வரவேற்கும் பணிகள் ஒரு திட்டமாகத்தான் செயல்படுத்தப்படும். அடையாளம் காண்பது, அவர்களை முழுவதும் சோதனையிடுவது, அவர்களது பயண விவரங்களை ஆய்வு செய்வது பின்னர் மறுவாழ்வு அளிப்பது என்ற அடிப்படையில் அவர்கள் இந்தியாவிற்குள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவின் ஒரு பகுதிதான். ஏதோ ஒரு காரணத்துக்காக எல்லை தாண்டி அப்பகுதிக்குச் சென்ற இந்தியர்களை மீண்டும் அழைப்பதற்காக இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications