ஓ.எஸ்.மணியன் வேட்டியைப் பிடித்து இழுத்த வழக்கு - அதிமுகவினருக்கு முன்ஜாமீன் மறுப்பு
சென்னை: மயிலாடுதுறை அதிமுக எம்.பி. ஓ.எஸ்.மணியனின் வேட்டியைப் பிடித்து இழுத்துத் தாக்குதல் நடத்திய வழக்கில் 3 அதிமுகவினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
கடந்த 28-ந்தேதி மயிலாடுதுறையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. எம்.பி. ஓ.எஸ்.மணியன் வந்திருந்தார். அப்போது உட்கட்சிப் பூசல் வெடித்தது.
சில அ.தி.மு.க. தொண்டர்கள் மணியனின் வேட்டியைப் பிடித்து இழுத்து அவரைத் தாக்கினர். இதில் மணியன் காயமடைந்தார்.
இதையடுத்து 16க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் வைத்தியநாதன், பாலமுருகன், அய்யப்பன் ஆகியோர் இன்னும் கைதாகவில்லை.
இந்த நிலையில் 3 பேரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி கே.என்.பாட்ஷா விசாரித்தார். ஓ.எஸ்.மணியன் சார்பில் எஸ்.பிரபாகரன் ஆஜராகி,
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஒருவர் மீது நடந்த தாக்குதல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. எனவே குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்றார்.
இதையடுத்து நீதிபதி பாஷா பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் ஆராயும்போது சம்பவம் மோசமாகத் தெரிகிறது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications