சுயநல பாஜக தலைவர்களை ஒரு பிடிபிடித்த நிதின் கட்காரி

அவர் தாக்கியது முன்னாள் பாஜக தலைவர ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சில தலைவர்களைத் தான் என்று தெரிகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இக் கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. வழக்கமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தான் பாஜக இது போன்ற தனது கூட்டத்தை நடத்தும்.
ஆனால், இந்தூரில் ஒரு மைதானத்தில் கூட்டத்தை நடத்தினார் கட்காரி. மேலும் தலைவர்கள் அனைவரும் 3 நாளும் மாநாட்டுத் திடலிலேயே தங்கியிருக்க வசதியாக அங்கேயே குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சில தலைவர்கள் மட்டுமே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இந்தக் குடில்களில் முக்கிய தலைவர்களுக்கு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் சாதாரண குடில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கட்காரி தலைவரான பின் நடத்தப்படும் முதல் தேசியக் கூட்டம் இது. முதல் நாளான நேற்று கூட்டத்தில் பேசிய முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங், தான் பதவி வகித்த காலத்தில் கட்சிக்குக் கிடைத்த வெற்றிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டியலிட்டார். ஆனால், மக்களவை பொதுத் தேர்தலிலும் உத்தரப் பிரேதசம் உள்ளிட்ட சட்டப் பேரவை தேர்தல்களிலும் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
மேலும் கட்சித் தலைவர் பதவி என்பது 'விக்ரமாதித்தன் சிம்மாசனம்' போன்றது என்றார்.
இதையடுத்துப் பேசிய கட்காரி கட்சியின் மூத்த தலைவர்களை ஒரு பிடி பிடித்தார். அவர் கூறுகையில்,
பாஜகவுக்கு தொண்டர்களால் எநத்ப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் தான் நமது பலமே. ஆனால், நான் என்ற அகந்தை கொண்ட சில தலைவர்களால்தான் பிரச்சனைகள் ஏற்பட்டன.
கட்சியைவிட நான்தான் பெரியவன் என்று கருதி சில தலைவர்கள் செயல்பட்டதால்தான் கட்சிக்குத் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டு வருகிறது.
முன்னணித் தலைவர்கள் தாங்கள்தான் கட்சி என்று நினைத்துவிட்டனர். அப்படி நினைத்ததல்லாமல் அந்த எண்ணத்திலேயே முக்கிய முடிவுகளை எடுத்துச் செயல்பட்டனர். அதன் விளைவாகத்தான் கட்சிக்கு தோல்விகள் தொடர்கின்றன. நம்முடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
நம்மைவிட நம்முடைய கட்சியின் கொள்கைகளும் லட்சியங்களும் உயர்ந்தவை என்ற எண்ணம் வர வேண்டும். கட்சிக் கட்டுப்பாடோடு நடந்து கொள்ள வேண்டும். கட்சி நமக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமே தவிர, கட்சி நம்முடைய கட்டளைக்கு இணங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
மற்ற கட்சிகளிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று கூறி வந்தோம். ஆனால், நடந்தது என்ன?. நாம் நமக்குள்ளேயே வேறுபட்டு நின்றுள்ளோம்.
கட்சிக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது கட்சிக்காக அவர் செய்த தொண்டும் அவருடைய நன்னடத்தையும் அவரது திறமையும்தான் பரிசீலிக்கப்பட வேண்டுமே. அதைவிட்டுவிட்டு 'வேறு தகுதிகள்' அடிப்படையில் அவரை தேர்தலில் நிறுத்தக்கூடாது.
கட்சியின் நிர்வாகிகள் எப்படிச் செயல்படுகின்றனர் என்று அடிக்கடி நாம் அளவிட வேண்டும். கட்சிக்குத் தோல்வி ஏற்பட்டால் அதற்கு இவர் தான் பொறுப்பு, இதுதான் காரணம் என்று நிச்சயமாகக் கூறும் அளவுக்குக் கட்சி நடவடிக்கைகள் அமைய வேண்டும். அப்போதுதான் நம்மை திருத்திக் கொள்ள முடியும்.
வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது கட்சியிலும் மக்களிடையேயும் செல்வாக்கு பெற்றவர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும். இவருக்கு வேண்டியவர், அவருக்கு வேண்டியவர் என்று யாரையும் தேர்வு செய்யக் கூடாது.
தலைவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதை நிறுத்திவிட்டு கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும்.
முதலில் நமக்கு கட்சிதான் முக்கியம். கடைசியாகத்தான் சொந்த நலன் இருக்க வேண்டும் என்றார் கட்காரி.
நிருபர்களுக்குத் தடை:
இந்தக் கூட்ட நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க நிருபர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூட்ட நிகழ்ச்சிகள் குறித்து நிருபர்களிடம் பின்னர் விளக்கினார்.
கட்காரியின் பேச்சு ராஜ்நாத் சிங்கைக் குறிவைத்து பேசப்பட்டதா என்று நிருபர்கள் கேட்டபோது அதை ரவிசங்கர் பிரசாத் மறுத்தார். ராஜ்நாத் சிங்கின் பணிகளை கட்காரி 'பாராட்டியதாக' அவர் பதில் தந்தபோது நிருபர்கள் சிரித்துவிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கட்காரி, மும்பை மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாகிஸ்தான் தலைவர்களுக்கு அவர்கள் நாட்டிலேயே எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாது. அப்படி இருக்கும்போது அவர்களுடன் எதற்காக இந்தியா அமைதிப் பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என்று புரியவில்லை.
அமெரிக்கா அளிக்கும் நெருக்கடி காரணமாகத்தான் இந்த பேச்சு வார்த்தையே நடத்தப்படுகிறது.
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு பாகிஸ்தான், சீனா நாடுகளின் மீது சரியான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றவில்லை என்று மூத்த தலைவர் அத்வானி கூறியது சரியானதுதான்.
மத்திய அரசின் தவறான கொள்கை காரணத்தால்தான் காஷ்மீர் மீதான இந்தியாவின் பிடி பலவீனமாக உள்ளது. தவிர, 1962ம் ஆண்டு சீனா ஏற்படுத்திய ரணம் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications