ஹெட்லிக்கு உதவிய பெண்-வலை வீசி தேடுகிறது போலீஸ்

கொல்கத்தாவைச் சேர்ந்தவன் அமிர் ராஸா கான், 'அமிர் ராஸா கமாண்டோ படை' என்ற தீவரவாதப் படையை நிறுவி நடத்தி வந்தவன். தற்போது அவன் பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இவனுடைய கைவரிசை இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹெட்லியுடன் இணைந்து அமிர் சதி திட்டங்களை தீட்டியிருப்பதாகவும் அறியப்படுகிறது.
அமிர் ராஸா கான் தனது தோழியின் மூலமாக ஹெட்லியிடம் அறிமுகமானான் என போலீசார் கூறுகின்றனர்.
தாக்குதல்களுக்கு முன்னதாக உளவு பார்ப்பதற்காக ஹெட்லி இந்தியாவுக்கு வந்த போதெல்லாம் அவருக்கு துணையாக தனது தோழியை அமிர் அனுப்பி இருக்கிறான்.
அஜ்மீர், கான்பூர், டெல்லி போன்ற இடத்துக்கு ஹெட்லி வந்தபோதெல்லாம் அத்தனை வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தது இந்த பெண் தான் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
26 வயதான அந்தப் பெண் தற்போது இந்தியாவில் தான் இருக்கிறார் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
போகும் இடங்களில் எல்லாம் இவரை தனது மனைவி என ஹெட்லி கூறியிருக்கிறான். அதோடு தன்னை ஒரு டூரிஸ்ட் கைட் என சொல்லிக் கொள்ளும் அந்த பெண் ஏராளமான தீவிரவாதிகளின் போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாராம்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்துக்கு தீவிரவாதிகள் தப்பி ஓடவும் இவர் பாதுகாப்பான திட்டங்களை தீட்டி கொடுத்திருக்கிறார் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அமிர் ராஸா கானின் தோழியான இந்த பெண் இந்தியாவை விட்டு வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை. அவரை விரைவிலேயே பிடிப்போம் எனக் கூறும் போலீசார்,
இவரை பிடித்து விசாரித்தால் புனே குண்டுவெடிப்பு சம்பவம் மட்டுமல்ல, பல தீவிரவாத தாக்குதல் பற்றி துப்பு துலங்கும் என்றனர்.
என்எஸ்ஜி குழு புனே வருகை
இதற்கிடையே, புனே நகரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த ஜெர்மன் பேக்கரிக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையின் குழு வருகை தந்து மாதிரிகளை சேகரித்தது.
நான்கு பேர் கொண்ட என்எஸ்ஜி படையின் வெடிகுண்டு புள்ளிவிவர மையத்தின் நிபுணர் குழு நேற்று இரவு ஜெர்மன் பேக்கரிக்கு வந்தது. அங்கு பல்வேறு மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர்.
அவர்களுடன் புனே போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங்கும் உடன் இருந்தார்.
ரிமோட் கன்ட்ரோல் குண்டா...?
பின்னர் சத்யபால் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்ன மாதிரியான குண்டு வெடித்தது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் குண்டாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
ஹெட்லிக்குத் தொடர்பா?
இதற்கிடையே, புனே சம்பவத்தில் ஹெட்லிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக உறுதியாகி வருகிறது.
இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜெர்மன் பேக்கரியில் வெடித்த வெடிகுண்டு மிகவும் சக்திவாய்ந்த ஆர்டிஎஸ் வகை வெடிகுண்டாகும். மகாராஷ்டிர மாநிலத்துக்கு வெளியே உள்ள தீவிரவாதிகள் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் துணையுடன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக புனேயைச் சேர்ந்த பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெங்களூரில் உள்ள சிலரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. வெடிகுண்டு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை ஓரளவு கண்டறிந்துவிட்டோம். இந்த சம்பவத்துக்கும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2008-09-ல் ஜெர்மன் பேக்கரிக்கு அருகிலுள்ள ஓஷோ ஆஸ்ரமத்துக்கு 2 முறை வந்து சென்றுள்ளார் ஹெட்லி. கோவாவிலிருந்து அவர் இரண்டு முறை கோரேகான் பூங்காவுக்கு வந்துள்ளார். சதித் திட்டத்தை தீட்ட அவர் அங்கு வந்திருக்கலாம்.
பேக்கரிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவில் எதிர்பார்த்த தடயங்கள் எதுவும் சிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களிடமிருந்தும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.
சம்பவம் நடந்த நேரத்தில், அந்த இடத்துக்கு அருகிலுள்ள செல்போன் கோபுரங்கள் மூலம் சுமார் 1.10 லட்சம் செல்போன்கள் அழைப்புகள் வந்துள்ளன. இதிலிருந்து உபயோகமான தகவல்கள் கிடைக்கின்றனவா என்பது குறித்தும் எமது தொழில்நுட்பப் பிரிவினர் தீவிர விசாரணையில் உள்ளனர்.
வெடித்த வெடிகுண்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆர்டிஎக்ஸ் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் பொருட்களானது, டெல்லி, அகமதாபாத், பெங்களூரில் நடந்த வெடிகுண்டு விபத்தில் பயன்படுத்தப் பொருட்களிலிருந்து வித்தியாசமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications