மார்ச் 27ம் தேதி பென்னாகரம் இடைத்தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 3ம் தேதி தொடங்கும். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 10ம் தேதியாகும்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை 11ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 13ம் தேதியாகும்.
இதையடுத்து மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடக்கும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 30ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதிதாக 18,989 வாக்காளர்கள் சேர்ப்பு:
இதற்கிடையே பென்னாகரம் தொகுதியில், 18,989 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக துணை வாக்காளர் பட்டியலை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,79,536 ஆகும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 18,989 வாக்காளர்களுடன் சேர்த்து அத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 1,98,525ஆக உயர்ந்துள்ளன.
இதில் ஆண் வாக்காளர்கள் 1,01,695 பேர். பெண் வாக்காளர்கள் 96,830 பேர் ஆவர். 2006-ல் நடைபெற்ற பென்னாகரம் தொகுதித் தேர்தலின் போது மொத்தம் 2,07,991 வாக்காளர்கள் இருந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 29 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாமக குற்றம் சாட்டியது.
இதையடுத்து அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் 40 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.
இதையடுத்து தேர்தல் ஆணையம் இத்தொகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி அலுவலர்களைக் கொண்டு புதிதாகக் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது.
இதையடுத்து 32,770 பேர் சேர்த்தல் படிவம்-6ஐ அளித்திருந்தனர். இதில் 19,510 படிவங்கள் ஏற்கப்பட்டன, 13,260 தள்ளுபடி செய்யப்பட்டன. 61 பேர் நீக்கல் படிவம்-7ஐ அளித்திருந்தனர். இதில் 4 ஏற்கப்பட்டன, 57 தள்ளுப்படி செய்யப்பட்டன. இறந்தவர்கள் 517 (இறந்தவர்கள் 400, இருமுறை பதிவு 117).
இதனடிப்படையில் தற்போது துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் அந்தந்த ஒன்றிய வட்டாட்சியர் அலுவலகங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications