தற்கொலைப் புலிகள் கொழும்பில் ஊடுறுவல்- அலறுகிறது இலங்கை

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம், இனிமேல் தலையெடுக்கவே மாட்டார்கள், அது முடியவும் முடியாது என்று வீராவேசமாக கூறிக் கொண்டுள்ள இலங்கை அவ்வப்போது இன்னும் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். தற்கொலைப் படையினர் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர் என்று சிங்கள மக்களை பீதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.
சிங்கள மக்கள் மத்தியில் பய உணர்வை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும், அதை வைத்துக் கொண்டு நாம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு இலங்கை பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே அளித்துள்ள ஒரு பேட்டியில்,
இலங்கை வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு உச்சக் கட்ட சண்டை நடந்த போது விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து சென்று விட்டனர். அதில் சிலர் கொழும்பு நகருக்குள் ஊடுருவி விட்டனர். தற்போதும் அவர்கள் கொழும்பிலேயே பதுங்கி உள்ளதாக உளவுத்துறை எங்களை எச்சரித்துள்ளது.
அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் ராணுவம் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பதுங்கி உள்ள தற்கொலை படையினரிடம் ஏராளமான ஆயுதங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் எப்போது, எங்கு தாக்குதல் நடத்துவர்கள் என்று தெரியாது. தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது.
வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் சிலர் பெரிய அளவில் நிதி திரட்டி வருவதை எங்களது உளவுத்துறை உறுதி செய்துள்ளது. எதற்காக அவர்கள் இவ்வளவு பணம் திரட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் அவர்கள் வேறு ஏதாவது ஒரு பாணியில் ஒருங்கிணைய முயற்சி செய்யலாம் என்று சந்தேகிக்கிறோம்.
தடுப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களிடையே ஏராளமான விடுதலைப் புலிகள் கலந்து இருக்கிறார்கள். அவர்களை பிரித்து அடையாளம் காண வேண்டியுள்ளது. அதுவரை தடுப்பு முகாம்களில் இருப்பவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க இயலாது.
வடக்கில் உள்ள சிலரும் வெளிநாடுகளில் உள்ள சில தமிழர்களும் இன்னமும் தமிழ் ஈழம் பற்றி விவாதித்து வருகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக இலங்கை வடக்கிலும், கிழக்கிலும் ஏராள மான ராணுவ வீரர் களை கண்காணிப்பு பணி யில் ஈடுபடுத்தி இருக்கிறோம் என்று கூறியுள்ளார் விக்கிரமநாயகே.
அதாவது, மிச்சம் மீதி இருக்கும் முகாம் தமிழர்களையும் ஒரேயடியாக அங்கேயே முடக்கி வைத்திருக்க வேண்டும், தமிழர்களை சுதந்திரமாக நடமாட விடக் கூடாது, புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் இலங்கை இந்த நிலையை எடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications