மிலாடி நபி: நல்லாட்சி அமைய உறுதி ஏற்போம்-ஜெ.
சென்னை: நல்லாட்சி அமைய மிலாடி நபி நாளில் உறுதி ஏற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மிலாடி நபியையொட்டி முஸ்லீம் சமுதாயத்தினருக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இறைநபி அவர்கள் அவதரித்த திருநாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் எனது அன்பார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய “மீலா துன் நபி" நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதனுக்கு மனிதன் சகோதரன் என்ற உண்மையை உலகத்திற்கு எடுத்துரைத்தவர் அண்ணல் முகமது நபி அமைதியும், சமாதானமும் உலகில் இன்றியமையாத தேவைகள் என போதித்தவர் அண்ணல் முகமது நபி.
மனிதனை மனிதனே வெட்டி சாய்த்துக் கொள்ளும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வன்முறைச் சூழல் அகன்று, மனிதப் புனிதராக வாழ்ந்த நபிகள் நாயகம். போதித்த பாதையில் தமிழ்நாட்டை வழி நடத்தி செல்லும் நல்லாட்சி அமைய இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
நபிகள் நாயகத்தின் உன்னத நடைமுறையை அன்றாட வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அவருடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வுறும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில்,
அகிலத்தோர்க்கு அழகிய முன் மாதிரி என்று திருக்குர் ஆனில் அருளப் பெற்ற அண்ணல் எம் பெருமானார் பிறந்த நன்னாள்-பொன்னாள் என்று இந்நாளில் புவியெங்கும் போற்றிக் கொண்டாடப்படுகிறது.
உத்தம நபியின் உதய தினம் என்பது இத்தரை மீதினில் சத்தியநெறி நிற்கும் சான்றோர் அனைவருக்கும் உள்ளத்தில் உவகையையும், லட்சியப்பயணத்தில் உறுதியையும் தரும் ஒப்பற்ற சிறப்புடையதாகும்.
சமூக ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் சற்றும் பங்கம் வராமல் பகைவரும் போற்றும் பண்புடன் மத நல்லிணக்கத்திற்கு வழி வகுத்து மனிதநேய மாண்பு காத்த மா நபி பிறந்த நாளில் மன் பதை எங்கும் அமைதியும், சமாதானமும் தழைக்கவும், தமிழ் மண்ணில் சமய நல்லிணக்கம் நிலைக்கவும் உழைக்க உறுதி கொள்வோம் என்று ம.தி.மு.க. சார்பில் இஸ்லாமியப் பெருமக்களை வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில்,
நபிகள் நாயகம் தோன்றிய இந்த நன்னாளில் மனித நேயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை துடைத்தெறிவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இன்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒடுக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வறு மையில் உழல்கிறார்கள். இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.
இவர்கள் முன்னேற்றத்திற்கு அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் குழுவின் அறிக்கை முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. இஸ்லா மியர்களுக்கென செய்யப்பட்ட ஒதுக்கீடும் செல்லாது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும் சட்ட ரீதியான சலுகைகளை இஸ்லாமியர்களுக்கு உருவாக்கித் தரவேண்டியது இந்திய அரசின் கடமை யாகும்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில்,
அன்பு வழியிலும் அற வழியிலும் மனித குலம் நடை போட வேண்டும் என்பதற்காக, தம் வாழ்நாளை அர்ப்பணித்த நபிகள் நாயகம் அவதாரத் திருநாளை, இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருமே நன்றியுடன் போற்றுகின்றனர்.
மனித நேயம், சகோதர உணர்வு, சமத்துவம் கருணை, கொடை உள்ளம் ஆகிய நற்பண்புகள் எல்லோருடைய உள்ளங்களிலும் மலர்ந்து இவ்வுலகம் அமைதியின் நிலைக்களனாய் விளங்கிட அண்ணல் நபிகளாரின் சீரிய கொள்கைகளைக் கடைப்பிடித்திட உறுதி ஏற்போம்.
நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மிலாடி நபி திருநாளில் என் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சீறாப்புறாண சொற்பொழிவு- அன்பழகன் பங்கேற்பு:
இந் நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு சென்னையில் தொடர் சீறாப்புராண சொற்பொழி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கடைசி நாள் விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொள்கிறார்.
முஸ்லீம் லீக்கின் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸிலில் இந்த நிகழ்ச்சியும், மவ்லூது நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் தினசரி மாலை நடைபெறும் சீறாப்புராண சொற்பொழிவில், குமரி அபூபக்கர் பாடல்களைப் பாட, புலவர் கமால் மைதீன் விளக்க உரை நிகழ்த்தினார்.
இன்று இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழக நிதியமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.












Click it and Unblock the Notifications