2 எம்எல்ஏக்கள் பதவியை பறிக்க கோரி சட்டமன்ற செயலாளரிடம் அதிமுக மனு
சென்னை: ஜெயங்கொண்டம், கோவில்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏக்களை கட்சித் தாவல் சட்டத்தின்படி எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கக் கோரி சட்டமன்ற செயலாளரிடம் அக் கட்சியைச் சேர்ந்த 51 எம்எல்ஏக்கள் இன்று மனு அளித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்களான ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். பின்னர் திமுக பொதுக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்றனர்.
இதையடுத்து 2 எம்.எல்.ஏ.க்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந் நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இதில் மிச்சமுள்ள 51 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கோட்டைக்கு சென்று சட்டமன்றச் செயலாளர் செல்வராஜை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அதில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராஜேந்திரன், கோவில்பட்டி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். ஆனால், கடந்த 20ம் தேதி திமுக பொதுக் குழுவில் கலந்து கொண்டனர். எனவே, கட்சித் தாவல் சட்டத்தின்படி 2 பேரையும் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications