பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.70 லட்சம் மோசடி - வாடிக்கையாளர் போராட்டம்
பல்லடம்: பாங்க் ஆப் பரோடா வங்கி கரடிவாவி கிளையில் ரூ.70 லட்சம் வரை மோசடி நடந்துள்ளதாகக் கூறி, வாடிக்கையாளர் பொதுமக்களை திரட்டி வந்து வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.
பல்லடம் அருகே சாமி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகேசன்; ஒர்க் ஷாப் நடத்தி வருகின்றார். இவர், கரடிவாவியில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் வங்கிக் கணக்கு வைத்துள்ளார்.
கார் வாங்குவதற்காக இவர் இந்த வங்கியில் கடன் பெற்றார். அதற்கான கடனை தவணை முறையில் செலுத்தி வந்தார்.
கடன் தொகைக்காக, சேமிப்பு கணக்கில் இருந்து 60 ஆயிரம் ரூபாயை தவணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வங்கிக்கு தெரிவித்தார்.
வங்கி ஊழியர்கள், 60 ஆயிரம் ரூபாயை கழித்து, அவரது கணக்கு புத்தகத்தில் வரவு வைத்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த வங்கியில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக முருகேசனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தனது வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என வங்கி ஊழியர்களிடம் முருகேசன் சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார்.
அப்போது, தனது கணக்கில் ரூ.60 ஆயிரம் வரவு வைக்காமல் இருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வங்கி மேலாளர் நாராயணனிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த முருகேசன் தனது ஊர் பொதுமக்கள் 50 பேரை திரட்டி பரோடா வங்கியை முற்றுகையிட்டார்.
இதனையடுத்து, வாடிக்கையாளர்களின் பணம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வங்கி அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து கருத்து கூற வங்கி அதிகாரி மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications