பொன்சேகா உண்ணாவிரதம் இருப்பது குறித்து தெரியாது - இலங்கை ராணுவம்
கொழும்பு: பொன்சேகா உண்ணாவிரதம் இருப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது இலங்கை ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் பிடியில் இருக்கிறார் பொன்சேகா. காற்று கூட புக முடியாத அறையில் அவரைப் போட்டு அடைத்து வைத்திருப்பதாக மனைவி அனோமா புலம்பி வருகிறார்.
இந்த நிலையில் அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து விட்டனராம். இதனால் குடும்பத்தினருடன் பேசக் கூட முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம் பொன்சேகா.
ராணுவத்தின் இந்த செயலால் கடும் அதிருப்தி அடைந்த பொன்சேகா சாப்பாடு சாப்பிடாமல் உண்ணாவிரதத்தில் குதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் பொன்சேகா உண்ணாவிரதம் இருப்பது குறித்து எதுவுமே தெரியாதது போல பேசியுள்ளது இலங்கை ராணுவம்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில்,
பொன்சேகாவுக்கு மூன்று வேளை உணவுகளையும் அவரது மனைவி அனோமாவே எடுத்துச் செல்கிறார் என்பதால், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளாரா என்பது பற்றி தெரியாது.
சரத் பொன்சேகாவுக்கு செல்போன் பயன்படுத்த அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, எனினும் அவர் தனது குடும்பத்தினருடன் உரையாடுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று சமரசிங்கே கூறியுள்ளதாக ஈழத் தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications