மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீது வங்கிகள் நம்பிக்கை!
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீது வங்கிகள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று துணை முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், மகளிர் தினம் மற்றும் 656 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.2 கோடி கடன் உதவி வழங்கும் விழாக்கள் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு தலைமை வகித்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் குழுக்களுக்கும் தானே நிதி உதவியை வழங்கினார்.
அவர் பேசுகையில், "சுய உதவிக் குழுக்கள் எத்தனை இருந்தாலும், அனைத்துக்கும் நிதி உதவியை முழுமையாகத் தரக் கூடிய நிலையை இப்போது உருவாக்கி இருக்கிறோம்.
பொதுவாக அரசு நிகழ்ச்சி என்றால், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் 10 நிமிடங்கள் வரை உரையாற்றுவர். பின்னர், 100 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருந்தால், 5 அல்லது 10 பேருக்கு அமைச்சர்கள் வழங்குவார்கள்.
மீதமுள்ளவற்றை அதிகாரிகள் கொடுப்பார்கள்; அப்படியும் இல்லாவிட்டால் பயனாளிகளின் வீடுகளுக்கோ, அல்லது பயனாளிகள் அரசு அலுவலகங்களுக்கோ சென்று நலத் திட்ட உதவிகளைப் பெறுவார்கள்.
இந்த நிலையை, சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கும் போது மாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம். அதனால்தான் அத்தனை குழுக்களுக்கும் நானே நிதி வழங்கி வருகிறேன்.
சுய உதவிக் குழுத் திட்டம் முதல்வர் கருணாநிதியால் தருமபுரியில் தொடங்கப்பட்டது. இது ஓட்டுக்காக துவங்கப்பட்ட திட்டமல்ல என்று முதல்வர் சொன்னார்.
அது இன்று உண்மையாகியுள்ளது. சுய உதவிக் குழுக்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
தேசிய அளவில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ.10,527.37 கோடியாகும். அதில், தமிழகத்துக்கு மட்டும் ரூ.2,174.57 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இது, தேசிய அளவில் கொடுக்கப்பட்ட மொத்த கடன் அளவில் 20 சதவீதம்.
இதற்குக் காரணம், தமிழகத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் பாங்கு தான். உங்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாக வங்கிகள் கடனை அளிக்கின்றன. இது, ஒட்டுமொத்த தமிழகத்துக்கே கிடைத்த பெருமை..." என்றார் ஸ்டாலின்.
நிகழ்ச்சியில், வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எஸ்.ஏ.பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications