அன்புமணியின் கார் சோதனை-போலீஸ் சாவடியை சூறையாடிய பாமகவினர்

நேற்று அன்புமணி தர்மபுரியில் இருந்து காரில் பென்னாகரம் வந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சில கட்சி நிர்வாகிகளின் கார்களும் வந்தன.
இண்டூர் சோதனை சாவடி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்தக் கார்களை நிறுத்தி சோதனையை ஆரம்பித்தனர்.
காரை சீக்கிரம் சோதனை செய்யுங்கள். நாங்கள் உடனே பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று அன்புமணி கூறவே, போலீஸ் வீடியோகிராபர் மூலம் காரை சோதனை செய்த பிறகே காரை அனுமதிப்போம் என்று போலீசார் கூறினர்.
இதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதற்கிடையே அன்புமணியின் கார் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்ட தகவல் அறிந்ததும், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் ரயில்வே இணையமைச்சர் வேலு, எம்.எல்.ஏக்கள் வேல்முருகன், தமிழரசு, இளவழகன் மற்றும் பாமக நிர்வாகிகள் அங்கு வந்து போலீசாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர்.
அப்போது அங்கு வந்து கார்களில் குவிந்த சுற்று வட்டார பாமகவினர் சோதனை சாவடியை சூழவே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந் நிலையி்ல் சோதனை சாவடியை பாமகவினர் தாக்க ஆரம்பித்தனர். அதை அடித்து நொறுக்கியதோடு சோதனை சாவடியில் இருந்த போலீஸ் வீடியோகிராபரும் தாக்கப்பட்டார். அவரின் கேமராவும் அடித்து நொறுக்கப்பட்டது.
பாமக தொண்டர்கள் தாக்கியதில் எஸ்.ஐ. நவாஸ் உள்பட 7 போலீசார் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட எஸ்பி சுதாகர் மற்றும் அதிவிரைவுப் படை போலீசார் அங்கு விரைந்து வந்து தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் சிதறி ஓடினர். இதில் 8 பாமகவினர் காயமடைந்தனர்.
தேர்தல் பார்வையாளர் கார் முற்றுகை:
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ரெட்டி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அமுதா மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களை பாமகவினர் முற்றுகையிட்டு கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் பார்வையாளரிடம் பேசிய பாமகவினர், நேற்று டாக்டர் ராமதாஸ் வந்த காரை மறித்து நிறுத்தினீர்கள். இப்போது டாக்டர் அன்புமணி வந்த காரை நிறுத்தி சோதனை செய்கிறீர்கள். இந்த வழியாக அமைச்சர்கள் 20க்கும் மேற்பட்ட கார்களில் வந்து போகிறார்கள். அவர்களை சோதனை செய்யாமல் அனுப்புகிறீர்கள். ஆனால் பாமக தலைவர்களை மட்டும் சோதனை செய்கிறார்கள் என்று கேட்டனர்.
இதையடுத்து தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆகியோர் ஜி.கே.மணி மற்றும் அன்புமணியிடம் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் பென்னாகரம், ஒகேனக்கல் சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்களும், தர்மபுரி நோக்கி சென்ற வாகனங்களும் ரோட்டில் நீண்ட வரிசையில் நின்றன.
தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ரெட்டி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைடுத்து பாமகவினர் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் அன்புமணி பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
சம்பவம் குறித்து ஜி.கே.மணி கூறுகையில், அன்புமணியின் காரை போலீசார் சோதனை செய்யாமல் அவரை காக்க வைத்தனர். எஸ்பி சுதாகர் மற்றும் போலீசார் வந்து எதுவும் பேசாமல் நேரடியாக தடியடி நடத்தினர்.
இதில் அன்புமணி மற்றும் எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு ஏராளமானோர் காயமடைந்தனர் என்றார்.
அன்புமணி மீது வழக்கு:
இதற்கிடையே தர்மபுரி தாசில்தார் ராமதுரை இண்டூர் போலீசில் பாமகவினர் மீது புகார் செய்தார். அதன்பேரில் அன்புமணி, ஜி.கே. மணி, எம்.எல்.ஏக்கள் இளவரசன், தமிழரசு,மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் இரா. அருள், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, உள்பட 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மீது 147 (அனுமதியின்றி கூடுதல்), 341 (தடுத்தல்), 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 332 (கையால் தாக்குதல்), 323 (ஆபாசமாக பேசுதல்), 294 (பி) ( குடிபோதையில் கெட்ட வார்த்தையால் பேசுதல்), 506 (1) (கொலைமிரட்டல்), 188 (சாலை மறியல் செய்தல்), 3 ஆப். பி.பி.டி ஆக்ட் (பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்னாகரம் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் அதிக அளவில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விதிமுறை அனைவருக்கும் பொருந்தும்-அமைச்சர்:
இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளரும் உணவுத்துறை அமைச்சருமான எ.வ.வேலு கூறுகையில்,
தேர்தல் விதிமுறைகள் என்பது அனைவருக்கும் பொருந்தும். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பென்னாகரம் தொகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன.
இதில் கட்சி பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் என பாகுபாடு இல்லை. அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். எங்கள் கார்களும் சோதனையிடப்படுகின்றன, அதை நாங்கள் எதிர்ப்பதில்லை. எங்கள் கார்கள் சோதனையிடப்படுவதும் வீடியோ எடுக்கிறார்கள்.
ஆனால், சில அரசியல் கட்சியினர் எங்களின் கார்களை சோதனை செய்ய கூடாது என்றெல்லாம் கூறுவது அரசியல் நாகரிகம் இல்லை. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
அனைத்து வாகனங்களையும் சோதனையிடுக-குப்தா:
இந் நிலையில் பென்னாகரம் தொகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடக்க வேண்டும். பென்னாகரம் தொகுதியில் உள்ள சோதனைச் சாவடியை பாமகவினர் சேதப்படுத்தியாகத் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை லேசான தடியடி நடத்தி போலீஸôர் விரட்டி அடித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று போலீஸார் காயமடைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தர்மபுரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அமுதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. பணியில் இருந்து தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications